ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகள் அலுவலகத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுல கஜநாயக்கவால், தேர்தல் காலங்களில் பெருந்தோட்ட மக்களை இலக்கு வைத்து தரமற்ற மதுபானம் விநியோகிக்கப்படுகின்றது எனவும், மலையக தொழிற்சங்கங்கள் இதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன எனவும் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பான செய்தி சகோதர மொழி தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பானது.
இது தொடர்பில் கடும் கண்டனம் வெளியிட்டுள்ள நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், மேலும் கூறியவை வருமாறு,
“இன்றைய காலக்கட்டத்தில் பெருந்தோட்ட சமூகத்தை பொருத்தவரையில் கல்வியிலும் சரி ஏனைய துறைகளிலும் சரி வளர்ச்சியடைந்து வரும் சமூகமாக காணப்படுகின்றது. ஆனால் ஒரு சில அரசியல் நபர்களுக்காகவும் அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் தனிநபர்களால் இவ்வாறான கருத்துகள் பரப்பட்டுவருகின்றன.
மலையகத்தை இலக்கு வைத்து தவறான கருத்துக்களை ஊடகத்தின் ஊடாக வெளிப்படுத்தி இலாபம் தேடுகின்றனர்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிப்பதன் ஊடாக மலையக மக்களின் வாழ்க்கை சுபீட்சமாக அமையும் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். இவ்வாறான செயற்பாடுகளில் காங்கிரஸ் ஈடுபடாது.
இதற்கு மக்களும் தயார் நிலையில் இல்லை. எனவே தேர்தல் காலங்களில் இவ்வாறான பொய்யான தேர்தல் பிரச்சாரங்களை பரப்பி அவர்களை பலப்படுத்திக் கொள்வதற்காக கருத்துக்களை ஊடகத்தின் ஊடாக வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
ஆனால் அவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மலையகத்தில் இருக்கும் அனைத்து தொழிற்சங்கமும் தம்முடைய எதிர்ப்பினை தெரிவிப்பதுடன் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலமான ஒன்றிணைந்த மனுவும் கையளிக்கப்படும்.” – என்றார்.
