விஜயகாந்த் மகனின் ‘படைத் தலைவன்’ படத்தில் லாரன்ஸ்

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ வைரலானது. அதில் சண்முக பாண்டியன் நடிக்கும் எதாவது ஒரு படத்தில் நான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க தயார் என அறிவித்திருந்தார்.

விஜயகாந்துக்காக இதனை கண்டிப்பாக செய்வேன் எனவும், அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் இயக்குநர்கள் என்னை தொடர்புகொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.

ராகவா லாரன்ஸ் சொன்னபடி அதனை செய்தும் காட்டியுள்ளார். அதாவது கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார்.

இதுபற்றி படை தலைவன் இயக்குநர் யு. அன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, ராகவா லாரன்ஸின் வீடியோ பார்த்து மாஸ்டரை எப்படியாவது இந்த படத்தில் கொண்டு வர வேண்டும் என நான் விரும்பினேன். படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே இடம் இருந்தது. இதை மிகுந்த தயக்கத்துடன் ராகவா லாரன்ஸ் மாஸ்டரிடம் கூறினேன். ஆனால் அவர் எந்த யோசனைக்கும் இடம் தராமல், நான் நடித்து தருகிறேன். எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்றார்.

இதை கேட்டதும் இயக்குநராக எனக்கு மிகுந்த சந்தோஷம். கேப்டன் மேல் வைத்த மரியாதைக்கும், அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றும் வகையிலும் எந்த நிபந்தனையும் இன்றி உடனே ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஒத்துக் கொண்டது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

Related Articles

Latest Articles