” விமர்சன அரசியல்மூலம் மலையக மக்களின் எதிர்காலத்தை அழித்துவிட வேண்டாம்”

” மலையகத்துக்காக எதை செய்தாலும், அதில் குறை கண்டுபிடித்து, விமர்சன அரசியல் நடத்தியே மலையக மக்களின் எதிர்காலத்தை இல்லாமல் ஆக்குவதற்கு கூட்டமொன்று முயற்சித்துவருகின்றது.” – என்று இதொகாவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (20) நடைபெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டம் வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்திருந்தாலும் அவர்களுக்கு காணி, வீட்டு உரிமைகள் இருக்கவில்லை. இந்நிலையில் அம்மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு பாதீட்டில் 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கின்றோம்.

அத்துடன் எமது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நாம் 200 நிகழ்வை கொழும்பில் நடத்தினோம். அதில் கலந்துகொண்ட வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மலையக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். இதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆனால் இந்த நிகழ்வையும் சிலர் விமர்சித்து வருகின்றனர். நாம் 200 ஐ நடத்தி மலையக மக்களை கேவலப்படுத்திவிட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அந்த நிகழ்வுக்கு ஜனாதிபதியை அழைத்து, மலையக மக்களுக்கு 10பேச் காணி உறுதிமொழியை வழங்கவேண்டு என கேட்டுக்கொண்டிருந்தார். அவ்வாறே ஜனாதிபதியும் அந்த உறுதியை அந்த நிகழ்வில் வழங்கினார். தற்போது அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று இம்முறை வரவு செலவு திட்டத்தில் மலையக அபிவிருத்திக்காக கடந்த முறைகளைவிட அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதனையும் சிலர் விமர்சனம் செய்கின்றனர். இவ்வாறு விமர்சனம் செய்தே மலையக மக்களின் எதிர்காலத்தை இல்லாமலாக்க சிலர் இருக்கின்றனர். எம்மை பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி மலையக மக்களுக்கு என்ன தேவையோ அதனையே நாங்கள் செய்து வந்திருக்கிறோம்.

ஆனால் தொண்டமான்கள் பல வருடங்கள் மலையகத்தை ஆட்சி செய்துள்ள போதும் மலையக மக்களுக்கு எந்தவித காணி உரிமையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. நானே மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி உரிமையை பெற்றுக்கொடுத்தாக ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

உண்மையில் அரச காணியை வாங்கி தனியாருக்கு கொடுத்து, தனியார் நிறுவனம் மலையக மக்களை அங்கே நுழைய விடாததால், குறித்த தனியார் நிறுவனத்துடன் கலந்துரையாடியே 8 பேர்ச் காணி பெற்றுக்கொடுக்கப்பட்டது, மாறாக மலையகத்தில் எங்கேயும் 10 பேர்ச் காணி கொடுக்கப்படவில்லை. ஆனால் இப்போதுதான் மலையத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி 10 பேச் காணி வழங்குவதாக உறுதி வழங்கி இருக்கிறார்.

அத்துடன் மலையக மக்களுக்கு ஒரு இலட்சத்தி 70 ஆயிரத்துக்கும் அதிக வீடுகள் தேவையாக இருக்கிறன்றன. அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் 1000 வீடுகளே நிர்மாணிக்கின்றது. அதன் பிரகாரம் மலையகத்துக்கு தேவையான வீடுகளை பெற்றுக்கொள்ள பல வருட காலம் செல்லும். அதனால் 10பேச் காணி உரிமையை பெற்றுக்கொள்வதன் மூலம் அந்த மக்களுக்கு அவர்களுக்கே வீடுகளை கட்டிக்கொள்ள முடியுமாகிறது. அதேபோன்று கல்வி அபிருத்திக்கு தேவையான நிதியையும் ஜனாதிபதி ஒதுக்கி இருக்கிறார்.

அதனால் மலையக அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் குறை கூறுவதையும் விமர்சிப்பதையும் விட்டு, ஜனாதிபதியுடன் இணைந்து மலையக பிரதேசங்களை அபிவிருத்திசெய்ய முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். அதனால்தான் நாங்கள் ஜனாதிபதிக்கு எமது ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். எதிர்காலத்திலும் ஜனாதிபதிக்கு எமது முழுமையான ஒதுழைப்பை வழங்கி மலையக மக்களுக்கு தேவையான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.” – என்றார் ரமேஷ்.

Related Articles

Latest Articles