வெற்றிவாகை சூடப்போவது எந்த அணி?

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவின் இறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந் திகதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.2 முறை சாம்பியனான (2012, 2014) கொல்கத்தா அணி தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

லீக் சுற்றில் 9 வெற்றியுடன் முதலிடம் பிடித்த கொல்கத்தா அணி முதலாவது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஐதராபாத் அணி அதிரடியில் அசத்தி வருகிறது. நடப்பு சீசனில் இதுவரை 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்து வியக்க வைத்தது. ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 567 ரன்கள்), அபிஷேக் ஷர்மா (3 அரைசதத்துடன் 482), ஹென்ரிச் கிளாசென் (4 அரைசதத்துடன் 463) ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகிறார்கள்.

அவர்கள் நிலைத்து நின்று ஆடினால் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்குவார்கள். நடப்பு தொடரில் லீக் (4 ரன்), முதலாவது தகுதி சுற்று (8 விக்கெட்) என்று இரண்டு முறை ஐதராபாத்தை வீழ்த்தி இருக்கும் கொல்கத்தா அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

அத்துடன் 3-வது முறையாக கோப்பையை கையில் ஏந்த முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் ஐதராபாத் அணி முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுப்பதுடன் 2-வது முறையாக கோப்பையை வசப்படுத்த கடுமையாக வரிந்து கட்டும். வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனலாம்.

மழை யால் பாதிக்க வாய்ப்பா?

சென்னையில் நேற்று மாலை பெய்த மழை காரணமாக கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இன்று வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கனமழை இருக்காது என்பதால் இறுதிப்போட்டிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது

 

Related Articles

Latest Articles