வெற்றி மகுடம் சூடப்போகும் அணி எது?

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 50 ரன்களில் வீழ்த்தி உள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி.

இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) துபாயில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் நியூஸிலாந்து விளையாடுகிறது.

363 ரன்கள் என்ற பெரிய இலக்கை அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா விரட்டியது. ரியான் ரிக்கல்டன் மற்றும் அந்த அணியின் கேப்டன் பவுமா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ரிக்கல்டன், 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த ராஸி வான்டர் டூசன் உடன் இணைந்து 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் பவுமா. இருவரும் அரை சதம் கடந்த அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவரையும் நியூஸிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர் அவுட் செய்தார். அது ஆட்டத்தின் திருப்புமுனை தருணமாக அமைந்தது.

அதன் பின்னர் சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளை இழந்தது. கிளாஸன் 3, மார்க்ரம் 31, முல்டர் 8, மார்க்கோ யான்சன் 3, கேஷவ் மஹராஜ் 1, ரபாடா 16 ரன்கள் என ஆட்டமிழந்தனர்.

டேவிட் மில்லர் சதம்: இறுதி வரை களத்தில் இருந்த டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி சதம் பதிவு செய்தார். 67 பந்துகளில் 100 ரன்களை அவர் எட்டினார். 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசினார். 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை தழுவியுள்ள மற்றொரு ஐசிசி நாக்-அவுட் ஆட்டமாக இது அமைந்துள்ளது.

முன்னதாக, இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது நியூஸிலாந்து. பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. நியூஸிலாந்து அணிக்காக வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். யங், 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த கேன் வில்லியம்சன் உடன் 2-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரச்சின். இருவரும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை திரும்பட கையாண்டனர். சிறப்பான ஆட்டத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஐந்தாவது சதத்தை ரச்சின் பதிவு செய்தார். இந்த ஐந்து சதங்களையும் அவர் ஐசிசி ஒருநாள் தொடர்களில் எடுத்துள்ளார். ஐசிசி தொடரில் 13 இன்னிங்ஸ் ஆடி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். அவர் 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய கேன் வில்லியம்சனும் சதம் பதிவு செய்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய (இந்த ஆட்டத்துடன் சேர்த்து) மூன்று போட்டிகளில் அவர் சதம் விளாசி உள்ளார். அவர் 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டாம் லேதம் ரன் அவுட் ஆனார். மிட்செல், 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரேஸ்வெல் 16 ரன்கள் எடுத்தார். கிளென் பிலிப்ஸ், அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். கேப்டன் சான்ட்னர் 2 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து.

Related Articles

Latest Articles