வைத்தியர் ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைப்பு

குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியர்  சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி உயர் நீதிமன்றில்  தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை  எதிர்வரும் மே 16 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள  உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (ஜன 25)  நீதியரசர் பிரியந்த ஜயவர்தன தலைமையிலானா  எஸ். துறை ராஜா மற்றும்  குமுதினி விக்ரமசிங்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில்  ஆராயப்பட்டது. இதன்போதே இவ்வாறு எதிர்வரும்  மே 16 ஆம் திகதி இம்மனுவை  பரிசீலிக்க நீதியரசர்கள் தீர்மானித்தனர்.

சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த   இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் குருணாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் புஷ்பலால்,  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த  கித்சிறி ஜயலத்,  சி.ஐ.டி. பணிப்பாளர் ,  பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பாதுகாப்பு செயலர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தான் வருமானத்தை மீறி சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  தடுத்து வைக்கப்பட்டமை  சட்ட விரோதமானது என அறிவிக்குமாறும் , எந்த நியாயமான காரணிகளும் இன்றி தான் கைது செய்யப்பட்டமையை சட்ட விரோதமானது என தீர்ப்பளிக்குமாறும்,  மனுதாரர் கோரியுள்ளார்.

அரசியலமைப்பின்  12(1), 12(2), 13(1), 13 (2) மற்றும் 14(1)(ஏ) உறுப்புரைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், தனது விடயத்தில் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும் மதுதாரர் கோரியுள்ளார்.

இந்நிலையிலேயே மனு மீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் மே 16 வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை மனுதாரருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா சட்டத்தரணி ஹபீல் பாரிசுடன்  ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Latest Articles