மலையக பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் காவல் தெய்வ வழிப்பாடுகளில் அதிக ஈடுப்பாடுகள் கொண்டவர்களாக விளங்குகின்றனர்.
தேயிலை மலைகளில் தொழில் செய்யும்; தோட்ட தொழிலாளர்கள் தங்களின் நம்பிக்கைக்கு உரிய காவல் தெய்வங்களுக்கு ஆலயம் அமைத்தும், ஆலயங்கள் இன்றியும் ஆண்டாண்டு காலமாக வழிபாடுகளை நடத்திவருகின்றனர்.
அந்த வகையில் லிந்துலை நாகசேணை பிரதேசம் அகரகந்தை தோட்டத்தில் 200 வருடகால வரலாற்றைக் கொண்ட மாடசாமி ஆலயம், காளியம்மன் ஆலயம் மற்றும் நொண்டி மதுரை வீரன் ஆகிய காவல் தெய்வங்களுக்கு அத் தோட்ட மக்கள் ஆலயம் அமைத்து அத் தெய்வங்களுக்கு வருடா வருடம் திருவிழாக்கள் நடத்துவது அன்று முதல் இன்று வரை வழக்கத்தில் காணப்படுகிறது.

இதனடிப்படையில் அகரகந்தை தோட்டத்தில் பிரமாண்டமாக இரண்டு சிலைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற மாடசாமி ஆலயத்தின் வருடாந்த வேள்வி உற்சவ விழா கடந்த வாரம் மூன்று திங்களாக இடம்பெற்றது. இதன்போது மாடசுவாமிக்கு தீர்த்த உற்சவம்,வேள்வி பூசை மற்றும் அன்னதான பூசை என இடம்பெற்றது.
இதை தொடர்ந்து சனிக்கிழமை (14) அன்று இத் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நொண்டி மதுரை வீரன் சுவாமி மற்றும் காளியம்மன் வருடாந்த விழா எடுக்கப்பட்டது.
இதன் போது வெள்ளையம்மா சகிதம் நொண்டி மதுரை வீரன் சுவாமிகள் மற்றும் காளியம்மன் ஆகியவற்றின் சப்பாரங்கள் ஊர் வலம் இடம்பெற்று சிறப்பு பூசைகள் வெகு விமர்சையாக நடைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஷ்










