அங்கஜனுக்கு அமைச்சுப்பதவியை வழங்கி அவரைப்பலப்படுத்தினால் சம்பந்தன், விக்னேஸ்வரன் போன்றவர்களின் அரசியல் பயணத்தை தோற்கடிக்க கூடியதாக இருக்கும் – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல்வீரவன்ஸ ஆலோசனை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொழும்பில் வாழ்ந்து, ரோயல் கல்லூரியில் பயின்று, பிள்ளைகளை சிங்களவர்களுக்கு மணம் முடித்துவைத்த விக்னேஸ்வரன், பூர்வீகம் பற்றியும், பூர்வீக மொழி குறித்தும் கதைக்கின்றார். இவ்விடயங்களில் அவருக்கு அந்தளவுக்கு பற்று இருக்குமானால் எதற்காக பிள்ளைகளை சிங்களவர்களுக்கு திருமணம் முடித்துவைக்க வேண்டும்? எனவே, இவையெல்லாம் பொய் நாடகம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
சம்பந்தனைவிடவும் தான்தான் தமிழ் தேசியவாதி, வீரன் என்பதை காட்டிக்கொள்வதற்கான முயற்சியிலேயே விக்னேஸ்வரன் இறங்கியுள்ளார். அதற்காகவே அடிப்படை வாதத்தைக் கையில் எடுத்துள்ளார். உலகில் பழமையான மொழி தமிழ் என்றெல்லாம் கூறினால் இலகுவில் மக்களை கவர்ந்துவிடலாம் என எண்ணியே அவ்வாறு உரையாற்றியுள்ளார்.
வடக்கு மக்கள் இன்று பிரிவினைவாதத்தை நிராகரித்துள்ளனர். 16 ஆக இருந்த கூட்டமைப்பின் எம்.பிக்கள் எண்ணிக்கை 10 ஆக குறைவடைந்துள்ளது. யாழ்.மாவட்டத்திலிருந்து சுதந்திரக்கட்சி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவாகியுள்ளார். அதேபோல் ஹக்கீம் போன்றவர்களின் அழுத்தம், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அதாவுல்லா வெற்றிபெற்றுள்ளார். இதன்மூலம் தமிழ், முஸ்லிம் மக்கள் பிரிவினைவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் நிராகரிக்கின்றமை புலனாகின்றது.
எனவே, அங்கஜனுக்கும், அதாவுல்லாவுக்கும் அமைச்சுப்பதவிகளை வழங்கவேண்டும். நடுநிலையாக செயற்படக்கூடிய அரசியல்வாதிகளை நாம் பலப்படுத்தவேண்டும். அப்போதுதான் சம்பந்தன், விக்னேஸ்வரன், ஹக்கீம், ரிஷாட் போன்றவர்களின் இனவாத, அடிப்படைவாத அரசியலை தோற்கடிக்ககூடியதாக இருக்கும்.” – என்றார்.
