Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோவான சரிகமப நிகழ்ச்சியில் பங்கு பற்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் இதயத்திலும் குடி புகுந்த குழந்தைதான் இலங்கையின் கண்டி மாவட்டத்தை சேர்ந்த அசானி. தேயிலைத் தோட்ட தொழிலாளியின் மகளான இவர் தன்னுடைய தனித் திறமையால் இன்று உலகம் கொண்டாடும் செல்ல பிள்ளையாக மாறி உள்ளார்.
இலங்கையை பிரித்தானியர் ஆட்சி செய்த போது ஒப்பந்த கூலிகளாக மலையகத்துக்கு வருகை தந்த தமிழ் மக்கள் இன்றும் 200 வருடங்களாகியும் மாறாத வடுக்களோடு வாழ்ந்து வருகின்றனர். கறை படிந்து அவர்களின் கரங்கள் ஆயிரம் கதைகளை சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில்தான் சாமானியர்களை சாதனையாளராக்கும் மேடையில் அசானி பாடல் பாடினார். இதன் பிறகு இந்த மக்களின் உள்ள குமுறல்கள் உலகெங்கும் கேட்க ஆரம்பித்தது. மேடையில் அசானி பேசும் பொழுது அம்மாவுக்காகவும் என் மக்களுக்காகவும் இங்கு பாட வந்தேன் என்று கூறியபோது பலரும் நெகிழ்ந்து போனார்கள்.
இதன் விளைவாக அசானி பிறந்த ஊரான நயப்பன தோட்டத்தை கனடாவில் வசிக்கும் மலையகத் தமிழரான சுபாஷ் சுந்தர்ராஜ் தத்தெடுத்து முழு கிராமத்தையும் நவீனமயமாக்க முன்வந்துள்ளார். 15 ஆவது வருடமாக ஜீ தமிழ் நடத்திய குடும்ப விருதுகளின் பங்கு பற்றிய இவர் அந்த மக்களுக்கான மாதிரி வீடுகளையும் அசானியின் மூலமாக கையளித்தார். அது மட்டும் இல்லாமல் அசானியின் எதிர்கால தேவைக்காகவும் படிப்பு செலவுகளுக்காகவும் இலங்கை மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய் அவரின் கணக்குக்கு வைப்பிலிட்டுள்ளார். இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஷும் கலந்து கொண்ட அந்த மேடையில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றது.
கலையால் முடியாதது எதுவுமில்லை. கலை நினைத்தால் எதையும் செய்யும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாக இருக்கின்றது. மலையக மக்கள் மீது கரிசனை கொண்ட சுபாஷ் சுந்தர்ராஜ் அவர்களை உலகத் தமிழர்கள் பாராட்டும் அதே சந்தர்ப்பத்தில் நயாப்பான தோட்ட மக்கள் நன்றி கடன்பட்டுள்ளதாக எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர். இவர்களுக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
– ராசையா கவிஷான் –