அடக்கம் செய்யப்பட்ட நபர் எழு நாட்களுக்கு பின் உயிருடன் வந்ததால் நாவலப்பிட்டியவில் பரபரப்பு – நடந்தது என்ன?

உயிரிழந்த நபரொருவரின் மரண விசாரணைகள் முடிவடைந்து, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு – சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டு ஏழாவது நாளில், உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் மரண விசாரணை அதிகாரியை தேடி வந்த சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கம்பளை பஸ் நிலையத்தில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் அவரின் சடலம் வைக்கப்பட்டது.

குறித்த சடலத்தை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், மேற்படி சடலம் நாவலப்பிட்டி உடஹேன்தென்ன மேரிவில தோட்டம் கீழ் பிரிவைச்சேர்ந்த 59 வயதுடைய லாசலர் மைக்கலுடையது என கடந்த வாரம் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் தாய் , சகோதரன் உள்ளிட்ட உறவினர்கள் சடலத்தை அடையாளமும் காட்டியுள்ளனர்.

பின்னர் கம்பளை திடீர் மரணவிசாரணை அதிகாரி நளின் மெதவக்கவினால் மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், லாசர் மைக்கலுடைய தாயினால் 70 ஆயிரம் ரூபா செலவு செய்து மேற்குறிப்பிட்ட தோட்ட மயானத்தில் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது

இவ்வாறு சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டு சில தினங்களில் உயிரிந்ததாக கூறப்பட்ட நபர் தனது தாயினை தேடிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான குடும்பத்தார், ” நீ கம்பளை பஸ் நிலையத்தில் இறந்து கிடந்து, உனது சடலத்தினை நல்லடக்கம் செய்துவிட்டோமே…” என கூறியுள்ளனர்.

இதன் போது குறித்த நபர் தான் கம்பளை நகருக்கு செல்லவில்லையெனவும் தான் நாவலப்பிட்டிய நகரில் தங்கியிருந்ததாகவும் கூறியதையடுத்து நேற்று முன்தினம் (27) மீண்டும் மரண விசாரணை அதிகாரியை தேடி வந்துள்ளனர்.

இதன் போது நல்லடக்கம் செய்யப்பட்ட நபரை அடையாளம் காணும் பொருட்டு கம்பளை பொலிஸார் விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

கம்பளை நிருபர்

Related Articles

Latest Articles