தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தவறியுள்ளது. அதேபோல அடக்குமுறை ஊடாக ஆட்சியை முன்னெடுக்கவும் எத்தனிக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மக்களின் உண்மையான பிரச்சினைகளை மூடி மறைத்து அடக்குமுறை ஊடாக ஆட்சியை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.
ஆரம்பத்தில் ராஜபக்சக்களை கள்வர்கள் என்றார்கள், அதன்பின்னர் 225 பெரும் கள்வர்கள் என்றார்கள், தற்போது ஒட்டுமொத்த அரச ஊழியர்களையும் கள்வர்கள் என்கிறார்கள்.
வைத்தியர்களுக்கும் இன்று அதே பட்டம் சூடப்பட்டுள்ளது. அடுத்து சட்டத்தரணிகள் இலக்கு வைக்கப்படுவார்கள். இறுதியில் வாக்களித்தே மக்களை அடக்கி ஆள முற்படுவார்கள்.
நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன.
எனினும், அரசாங்க அதிகாரிகள்மீது பழிபோட்டுவிட்டு தமது இயலாமையை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. மக்களை அடக்கி ஆள முற்படும் அரசாங்கத்தக்கு எதிராக நாம் அணிதிரள்வோம்.
நாட்டில் தேசிய பாதுகாப்பை அரசாங்கம் வீழ்த்தியுள்ளது. இதை பற்றி கதைப்பது இனவாத்தை தூண்டும் செயல் என்ற விம்பமும் உருவாக்கப்பட்டுள்ளது.” – என்றார்.