குறுகிய தூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய இரு ஏவுகணைகளை வடகொரியா, தமது நாட்டின் கிழக்கு கடற்கரை நோக்கி செலுத்தி இன்று பரிசோதனை நடத்தியுள்ளது. இது ஒரு படையெடுப்புக்கான ஒத்திகையாக இருக்கலாம் என பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் தென்கொரியா படையினர் இணைந்து கூட்டு விமான பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், அதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
மேற்படி கூட்டு பயிற்சி ஆரம்பமாவதற்கு முன்னதாக வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்திருந்து. இவ்வாறானதொரு பின்புலத்திலே , இன்று குறுந்தூர ஏவுகணை பரிசோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.
” திங்கட்கிழமை காலை வட கொரிய தலைநகரான பியோங்யாங்கிற்கு வடக்கே உள்ள மேற்கு கடற்கரை நகரத்தில் இருந்து இரண்டு ஏவுகணை ஏவுகணைகளை தென் கொரியா கண்டறிந்தது.” என தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
இதனையடுத்து தென் கொரியா தனது கண்காணிப்பு நிலையை அதிகரித்துள்ளதாகவும், அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இரண்டு ஏவுகணைகளும் கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் விழுந்ததாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, சுப்பர்சொனிக் விமானங்களை கொரிய வான்வெளிகளில் பறக்கவிட்டுள்ளது.
