தமக்கான அடிப்படை நாள் சம்பளத்தை 35 சதவீதத்தால் அதிகரித்து கொடுப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தோட்டத் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் தலைமைத்துவமும், உரிய அழுத்தங்களையும் பிரயோகித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும், ஜனாதிபதி பக்கம் உள்ள மலையக தமிழ் எம்.பிக்களுக்கும் அவர்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, உற்பத்திக்கேற்ப கொடுப்பனவாக 350 ரூபாவையும் விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனவும் இதன்மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபா நிச்சயம் கிடைக்கும் எனவும் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.
அவ்வாறு கிடைக்கப்பெற்றால் அது 70 சதவீத சம்பள உயர்வாக அமையும் எனவும், தோட்டத் தொழிலாளர்கள் வரலாற்றில் இதுவே அதிகூடிய சம்பள உயர்வாக அமையும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.