அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கே ஆதரவு – முற்போக்கு கூட்டணி முன்கூட்டியே அறிவிப்பு

அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது சஜித் பிரேமதாசவுக்கே தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்கும். சஜித்தை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மண்கவ்வுவது உறுதி – என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற ஆபத்துகளின்போது இந்தியாவே எமக்கு கைகொடுத்தது. ஆபத்துக்கு உதவும் உண்மையான நண்பன் இந்தியா என்பதை மறந்துவிடக்கூடாது.

இலங்கையை பாதாளத்துக்குள் தள்ளிவிட்டு கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு ஓடினார். அதன்பின்னர் மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் வரமுடியாத ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். ஆக தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை. எனவே, விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெற்றால் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயம் தோள் கொடுக்கும். சஜித் வெற்றி பெறுவார். அவரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மண்கவ்வுவார்கள். ஏனெனில் பிரச்சினைகளை மட்டும் பேதாது, தீர்வையும் வழங்கும் சிறந்த தலைவராக சஜித் செயற்படுகின்றார். அவரின் ஆட்சியின்கீழ் மலையக மக்களுக்கும் விடிவு பிறக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles