” உருளைக்கிழங்கு பயிரிட்டு லாபம் பெருவதற்கோ குடிநீரை விவசாயத்துக்குக் களவாடுவதற்கோ அல்லது கிடைக்கும் சிற்றூழியர்கள் நியமனத்தை லட்சக்கணக்கில் விற்பதோடு அண்டாவையும் குண்டாவையும் கொடுத்து சேவையென புகழ்ச்சியடைவதற்காகவோ நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.” – என்று மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டத்தரணியும் கோடரி சின்ன வேட்பாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
மெராயா பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்புகளின்போது, இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” மலையக இளைய தலைமுறையினரின் அடையாளத்துக்காகவும் இன்னும் 10 வருடங்களில் எம் சமூகம் அதற்குறிய அடையாளங்களுடனும் வாழ வேண்டுமென்ற நோக்கத்துடனேயே நான் இந்த பாராளுமன்ற தேர்தலில் மலையகத்தின் ஒரே ஒரு பெண்ணாக துணிந்து களமிறங்கியள்ளேன்.
பணமும் பந்தாவும் அரசாங்க நிதி ஒதுக்கீடும்தான் முக்கியமென்று என் தந்தை அரசியலில் இறங்கவில்லை கோடி கோடியாக சம்பாதித்து சொத்துக்கள் குவித்திருக்கும் நிலையை என் பாட்டனார் என் தந்தைக்கு விட்டுச்சென்றிருந்தார் – ஆனால் தன் சொத்துக்களை மட்டுமல்ல தனது இளமைக்காலம் முழவதையும் என் தந்தை நம் சமூக செயற்பாடுகளில் முற்றாக இழந்தார். தந்தையாகி எம்மைவிட்டு வருடக்கணக்கில் சிறையில் இருந்தார்.
இன்று சம்பாதிப்பதுதான் எனது நோக்கமென்றால் ஒரு சட்டத்தரணியாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் ஆனால் அது என் தந்தைக்கும் அவரை நம்பிய விசுவாசிகளுக்கும் ஏன் எனக்கு நானே செய்துக் கொள்ளும் துரோகமாகவே அமையும்.
ஆகவே தான் என் தந்தையின் அடையாளத்துக்காக களத்தில் இறங்கியுள்ளேன். எத்தனை வியாபாரிகள் வந்து தடுத்தாலும் என் பயணத்தை நிறுத்த முடியாது.
எத்தனை அல்லக்கைகலாலும் என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது.
ஓய்வெடுக்க வேண்டியவர்களின் கோழைத்தனமான செயற்பாடுகளைக் கண்டு நான் ஒரு போதும் ஓடி ஒழிய மாட்டேன். ஒரு பெண்ணுடன் மோதும் பணமுதலைகளைக் கண்டு பின் வாங்க மாட்டேன்.
எல்லா பெண்களிடமும் தன் பலவீனத்தை காட்டுவது போல இந்த வீரனின் மகளிடம் விளையாட்டு காட்ட முற்பட்டால் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடத்தை கற்பிப்பேன். என்னுடன் கருத்து ரீதியாக மோதமுடியாத கலாநிதிகள் நிச்சயம் என்முன் கைகட்டி நிற்கச்செய்வேன் என்றும் கூறினார்.