சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் அரசியல் வசனங்கள் ஏராளமாக இடம்பெறும் என கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்போவதாகவும் தெரிவித்தார். கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அண்ணாத்த படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு ஐதராபாத்தில் வருகிற 15 ஆம் திகதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 12 ஆம் திகதி தனது பிறந்தநாளை ரஜினி பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணா வீட்டிலேயே கொண்டாடுகிறார். அதன்பிறகு 15 ஆம் திகதி அவர் ஐதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் காலகட்டம் என்பதால் ரஜினி மிகவும் பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். படப்பிடிப்பு தளத்திலும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் ரஜினி கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும். ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று ‘அண்ணாத்த’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
‘அண்ணாத்த’ படத்தில் அரசியல் சரவெடி வசனங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் புத்தாண்டு நேரத்தில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மிகவும் உச்சகட்டத்தில் இருக்கும். அப்போது ‘அண்ணாத்த’ படம் திரைக்கு வருவது அவரின் அரசியல் பிரசாரத்துக்கு மிகவும் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே படத்தில் அரசியல் வசனங்கள் ஏராளமாக இடம்பெறும் என்று தெரிகிறது.