அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் கல்வி அமைச்சருடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

– ஆசிரியர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படுமென உறுதி –

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அரசாங்கம் சாதகமாக செயல்பட்டு வருவதாகவும் நியாயமான ஒரு தீர்வு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுமெனவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார்.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறும் ஆசிரியர் சேவை ஒருங்கிணைந்த அரச சேவையாக மாற்றுமாறும் வலியுறுத்தி கடந்த ஒருமாதகாலமாக அதிபர், ஆசிரிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக அரசாங்கம் விசேட அமைச்சரவை உபக்குழுவொன்றைநியமித்து தீர்வுகாண முற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிசுடன் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் நடத்தியுள்ள கலந்துரையாடலின் போது, மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அரசாங்கம் விரைவாக தீர்வு எடுக்க வேண்டும் என செந்தில் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்போது, இருதரப்பினருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் ஒரு நியாயமான தீர்வொன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் எனவும், அமைச்சரவை உபக் குழுவின் சிபாரிகளின் பின்னர் அரசாங்கம் இந்த விடயத்தை அறிவிக்குமெனவும் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமானிடம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles