” மலையக இளைஞர்களை தவறாக வழிநடத்தாதீர்கள், பிழையான தகவல்களை கொண்டு செல்லாதீர்கள். மலையக மக்கள் முன்னணி என்றுமே இளைஞர்களை தவறாக வழிநடத்தியது இல்லை. தோல்வியை கண்டு பயந்து போயிருக்கின்றவர்கள் எங்கள் மீது பழி சுமத்துகின்றார்கள். ஆனால் உண்மையான நிலைமை என்ன என்பதை மக்கள் அறிவார்கள்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சுயேச்சை குழுவில் போட்டியிட்டுக் கொண்டு எங்கள் மீது பொய்யான பழி சுமத்தி அதன் மூலம் அனுதாபத்தை பெற்றுக் கொண்டு வாக்குகளை சேகரிக்க முயற்சி செய்கின்றார்கள். ஏன் எங்களை விமர்சனம் செய்கின்றீர்கள், நீங்கள் இதுவரை இந்த மக்களுக்கு என்ன செய்தீர்கள்? என்ன செய்யப் போகின்றீர்கள் என்பதை மக்களிடம் கூறி வாக்குகளை வாங்க முயற்சி செய்யுங்கள்.
அக்கரபத்தனையில் உண்மையில் நடந்தது எங்களுடைய மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரான கிளாசோ அக்கரபத்தனை கீழ் பிரிவை சேர்ந்த பாலகிருஸ்ணன் பாலசுப்பிரமணியம் என்பவரே தாக்கப்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்பு வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக அக்கரபத்தனை பொலிசார் கோடரி சின்ன ஆதரவாளர்கள் மூவரை கைது செய்து அவர்களை நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த பொழுது அவர்களை இன்று வரை (17.07.2020) விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதுவே உண்மையான சம்பவம் எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி மலையக இளைஞர்களை பிழையான வழியில் கொண்டு செல்ல வேண்டாம்.இன்று மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களின் குடும்பங்கள் நீதிமன்றத்திற்கும் பொலிஸ் நிலையத்திற்கும் அழைந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்காக அவர்கள் தங்களுடைய சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டும்.
எனவே ஒற்றுமையாக இருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களை தேர்தலுக்காக பிழையான வழியில் கொண்டு சென்று அவர்களுடைய ஒற்றுமையை இல்லாது செய்துவிட வேண்டாம் . உங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காகவும் தேர்தலை மாத்திரம் மையப்படுத்தி மக்களை பளிக்கடாவாக பயன்படுத்தாதீர்கள்.” – என்றார்.
.