அனைத்து தனியார் மருந்தகங்களும் நாளை பூட்டு!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தனியார் மருந்தகங்களும் நாளை (09) மூடப்படும் என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவையாகக் கருதி, எரிபொருளை பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் கிடைக்காததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக்க கங்கந்த குறிப்பிட்டார்.

நாட்டு மக்களின் மருந்துத் தேவையில் சுமார் 70 வீதமானவை தனியார் மருந்தகங்கள் மூலமாகவே விநியோகிக்கப்படுவதாக அவர் கூறினார்.

எனினும், மருந்தக ஊழியர்களின் போக்குவரத்திற்கும், மருந்துப்பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் தேவையான எரிபொருள் இதுவரை விநியோகிக்கப்படவில்லை என சந்திக்க கங்கந்த சுட்டிக்காட்டினார்.

இதனால், தனியார் மருந்தகங்களில் மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அடையாள பணிப்பகிஷ்கரிப்பாக நாளை அனைத்து தனியார் மருந்தகங்களும் மூடப்படும் எனவும் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக்க கங்கந்த குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles