மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 13ஆவது சிரார்த்த தின நிகழ்வு ஹட்டனிலுள்ள முன்னணியின் தலைமை காரியாலயத்தில் நாளை (01.01.2020) நடைபெறவுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில், பிற்பகல் 2 மணிக்கு குறித்த நிகழ்வு நடைபெறும் என ம.ம.முவின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜேசந்திரன் தெரிவித்துள்ளார்.
” மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 13ஆவது நினைவுதின நிகழ்வை மலையக மக்கள் முன்னணி தொடர்ச்சியாக 13 வது வருடமாக முன்னெடுத்து வருகின்றது.
அவர் மலையக மக்களுக்கு செய்த சேவைகளையும் தனி வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து மலையக மக்களின் வாழ்வில் அவர் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி பணிகளையும் மலையக சமூகமும் ஏனைய சமூகத்தைப் போல இந்த நாட்டில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற அவருடைய கொள்கைகளையும் முன்னெடுக்கும் வண்ணமே இந்த 13 வது சிரார்த்த தின நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள் , தோட்ட கமிட்டி தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.” – எனவும் அவர் கூறினார்.