அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கொழும்பில் முக்கிய பல தரப்பு சந்திப்பு

இந்து- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முதன்மை பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலாளர்  ஜெடிடியா பி றொயல்  தலைமையிலான தூதுக்குழு  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை இன்று (பெப்ரவரி 16)  இருவேறு சந்தர்ப்பங்களில் சந்தித்தனர்.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் அந்தோனி நெல்சன்னுடன்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த அமெரிக்காவின் முதன்மை பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலாளரை,  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வரவேற்றார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இருவருக்கும் இடையே சுமுகமான கலந்துரையாடல்  இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது அமெரிக்க தூதரகத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் திரு. செத் நெவின்ஸ், அமெரிக்காவின் தெற்காசிய விடயங்கள் தொடர்பான அலுவலகர் லெப்டினன்ட் கேர்ணல் கிறிஸ்டியன் மிட்செல், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் (பாதுகாப்பு) திரு ஹர்ஷ விதானாராச்சி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை அமெரிக்க தூதுக்குழுவினர் இன்று கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்ததுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவையும் சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த அமெரிக்காவின் முதன்மை பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலாளர்  ஜெடிடியா பி றொயல் அவர்கள் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு  நினைவு கூறப்பட்டது.

மேலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஸ்திரத்தன்மை குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, அமெரிக்க தூதரகத்தின் உதவி பாதுகாப்பு இணைப்பாளர் திரு. செத் நெவின்ஸ் மற்றும் அமெரிக்க தெற்காசிய விடயங்கள் தொடர்பான அலுவலகர் லெப்டினன்ட் கேர்ணல் கிறிஸ்டியன் மிட்செல் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles