மலையக மக்களுக்கும் ஏனைய பிரஜைகள்போல சம உரிகைளை உறுதிப்படுத்தக்கூடிய மலையக சாசனத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், ‘மலையக சாசனம்’ என்ற விடயத்தை வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் நடத்துவது தொடர்பில் மலையக புத்திஜீவிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
பேராசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகளை உள்ளடக்கிய வகையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் முயற்சியில் மலையக சாசனம் தயாரிக்கப்பட்டது.
அது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, சட்டமாக்கும் பணி மற்றுமே எஞ்சியுள்ளது.
மலையக மக்களுக்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்கு வழிவகுக்ககூடிய வகையில் அமைந்துள்ள மேற்படி சாசனம், காலத்தின் கட்டாய தேவையாக அமைந்துள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் செய்துகொண்ட இணக்கப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மலையக சாசன பிரகடன நிகழ்வை இன்று நடத்துவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியினர் தயாராகிவருகின்றனர்.
சமூக மாற்றத்தின் நிமித்தம் காத்திரமானதொரு வேலைத்திட்டத்தை அமைச்சர் ஜீவன் முன்னெடுத்துள்ள நிலையில், அந்த வேலைத்திட்டத்துக்கு ஒப்பான பெயரொன்றை வைத்து முற்போக்கு கூட்டணி நிகழ்வு நடத்துவது வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும் எனவும் மலையக சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் செய்துமுடிக்கப்பட்ட – செய்வதற்கு திட்டமிடப்பட்ட சில முன்மொழிவுகள் சஜித்தின் மலையகம் தொடர்பான தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், இந்த மலையக சாசனம் விடயம்கூட பிற்போக்கான ‘பின்பற்றல்’ அரசியலின் வெளிப்பாடு என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சம்பளப் பிரச்சினையை மட்டும் வைத்து மலையக சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்படும் முற்போக்கு கூட்டணியின் இந்த அரசியல் அணுகுமுறைக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தொழிற்சங்க பிரமுகர்கள் சிலர் குறிப்பிட்டனர்.