இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனபிட்டிய, விராலிகலை தோட்டத்தில் கரகம் பாலிக்கும் கோவிலில் அம்மன் சிலைக்கு அணிவித்திருந்த தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர்கள் இருவரை, இராகலை பொலிஸார், நேற்று (23) மாலை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் விராலிகலை தோட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் அம்மன் சிலைக்கு அணிவித்திருந்த தங்கத்திலான பொட்டு மற்றும் மணி ஆகியவற்றை களவாடியுள்ளனர்.
களவாடிய நகைகளை இருவேறு நகை அடகு பிடிக்கும் இடங்களில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.
இராகலை நகரில் அடகு கடை ஒன்றில் பொட்டு அடகு வைக்கப்பட்டுள்ளதுடன், மணியை கோனக்கலை சிறு நகரில் கிராமிய வங்கி ஒன்றில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, இராகலை பொலிஸார் குறித்த நபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், நகைகளும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் சந்தேக நபர்கள் தாம் நகைகளை திருடியதாகவும், வறுமை காரணமாக அம்மனுக்கு சூடம் ஏற்றி மன்னிப்பு கேட்டே நகைகளை தாலி கயிருடன் கொண்டு சென்றதாகவும், பொலிஸாரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்களை வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை இராகலை பொலிஸார் மேற்கொள்ளனர்.
நிருபர் – டி,சந்ரு










