” தேசிய இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைக்ககூடிய அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குங்கள்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து, சுகநலம் விசாரிப்பதற்காக அவரின் வதிவிடத்துக்கு மஹிந்த ராஜபக்ச இன்று சென்றிருந்தார்.
இதன்போது இருவருக்கும் இடையில் கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது. அவ்வேளையிலேயே சம்பந்தன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை நடத்தி, சுமுகமான தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
தமிழர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள் சர்வகட்சி மாநாட்டில், தமது கட்சியின் பிரதிநிதிகளும் கலந்துக்கொள்வார்கள் என மஹிந்த ராஜபக்ஸ இதன்போது கூறியுள்ளார்.