அரசு பதவி விலக வேண்டும்!

“ நாட்டை வங்குரோத்து அடையவைத்தவர்களுக்கு சட்டம் இயற்றும் தார்மீக உரிமை கிடையாது. எனவே, அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருக்காமல் இந்த அரசு உடன் பதவி விலக வேண்டும்.” – என்று எதிரணி பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல வலியுறுத்தினார்.

அத்துடன், நிகழ்நிலை காப்பு சட்டத்தால் சர்வதேச ஆதரவை இழக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில நடைபெற்ற நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசால் முன்வைக்கப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் முழு சர்வதேசமும் எதிர்ப்பை வெளியிடும். கூகுள், மெடா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. நாட்டை வங்குரோத்து அடையவைத்துவிட்டு உலகம் முழுதும் யாசகம் பெறும் இந்த அரசு, இப்படியான நிறுவனங்களை எதிர்த்துக்கொண்டு பயணிக்க முடியுமா? இந்த சட்டமூலம் நிறைவேறினால் சர்வதேச ஆதரவை இழக்க நேரிடும்.

அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச அமைப்புகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனவே, இச்சட்டமூலத்தை ஒத்திவைத்து, எமது யோசனைகளையும் உள்வாங்கி, ஜனநாயக முறையில் அதனை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

நாட்டை வங்குரோத்து அடைய வைத்தவர்களுக்கு சட்டம்கொண்டுவர அதிகாரம் இல்லை, பதவி விலக வேண்டும், ஆட்சியை விட்டு செல்ல வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles