அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 65 என்பதை அரசாங்கம் கண்டிப்பாக்கவில்லை என பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கிணங்க அரசாங்க ஊழியர்கள் தமது 55 வயதை நிறைவு செய்த பின்னர் விரும்பிய முறையில் ஓய்வுபெறும் காலத்தை தீர்மானித்துக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நிர்ணயிப்பதற்கு அனைத்து தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டே தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன் ஓய்வூதிய கொடுப்பனவில் நிலவும் முரண்பாடுகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சிலர் அது தொடர்பில் விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது அரசாங்கத்தின் காலத்தில் அரச துறை வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு அரச துறையை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.கொரோனா வைரஸ் பாதிப்பு காலங்களிலும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு சமமாக எமது நாட்டிலும் அரச நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.