2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று முன்வைக்கப்படவுள்ளது. இதனைமுன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை வங்குரோத்து அடைந்துள்ள நிலையில், முன்வைக்கப்படும் பாதீடு என்பதால் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்ட முன்மொழிவுகள் பெரும்பாலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரம் சில நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களை பாதீட்டு உரையில் ஜனாதிபதி விளக்கமளிப்பார்.
புதிய சில வரிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அதாவது இருப்பவர்களிடம் பறித்து, இல்லாதவர்களுக்கு சுமைகளை அதிகரிக்காத வகையிலான ஏற்பாடுகளும் உள்ளன என்று ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பும் வெளியாகவுள்ளது.
13 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்டஉரை மாத்திரமே நடைபெறும்.
மறுநாள் நவம்பர் 14 முதல் 21 வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்ட) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. வரவுசெலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, குழுநிலை விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. அதற்கமைய, 2024 நியதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 6.00 மணக்கு இடம்பெறவுள்ளது.