அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பயனாளிகள் தெரிவு கிரமமாக இடம்பெற வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்
அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அஸ்வெசும நலன் குறித்த திட்டம் என்பது உலக வங்கி நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட வருடங்களுக்கான ஒரு நலன்புரி திட்டமாகும். இந்தத் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு கணினி மயப்படுத்தப்பட்டு பயனாளிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில், அது தொடர்பில் பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனவே இது தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் எடுத்து சரியான வகையில் பயனாளிகளை தெரிவு செய்வதற்கான வழிவகைகளை முன்னெடுக்க வேண்டும். இந்த அசுவெசும கொடுப்பனவிற்காக
1. மிக வறுமை (Severely Poor) – மாதாந்தம் ரூ. 15,000.00
2. வறுமை (Poor) – மாதாந்தம் ரூ. 8,500.00
3. பாதிப்புக்கு உள்ளானோர் (Vulnerable) – மாதாந்தம் ரூ. 5,000.00
4. நிலையற்ற வருமானம் (Transient) – மாதாந்தம் ரூ. 2,500.00
என்ற வகையில் நான்கு வகை பயனாளிகள் தெரிவு செய்யப்படுகின்றார்கள்.
மலையகத்தில் வாழும் பெருந்தோட்ட தொழில் புரிகின்ற மக்கள் முதல் இரு வகைக்குள் உள்ளடங்குவதற்கான தகுதியினை கொண்டிருந்தாலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டே உள்ளனர்.
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் சமுர்த்தி கொடுப்பனவு உட்பட போன்றவற்றிலும் தோட்டத் தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்கள் என்பதினை மாத்திரம் கருத்தில் கொண்டு புறக்கணிக்கப்படுகின்றார்கள்.
எனவே உலக வங்கி நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த வேலை திட்டத்தினை நாம் வரவேற்கின்ற அதே வேளை அது சரியானதாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் கரிசனை கொண்டு உள்ளோம்.
இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த சமுர்த்தி கொடுப்பனவு முதியோர் கொடுப்பனவு போன்ற நலன்புரி கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு அவர்களும் இந்த விபர திரட்டினுள் உள்வாங்குவதற்கான திட்டமே காணப்படுகின்றது.
எனவே இதற்கு முன்னரான நலன்புரி கொடுப்பனவு பெறும் பயனாளிகள் பாதிப்படையாத வகையிலும் இது அமைய வேண்டும்.
அதேவேளை பெருந்தோட்டபுறங்களில் ஒரே வீட்டினுள் வசிக்கும் உப குடும்பங்களும் இவ்வாறான திட்டங்களில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை .அது தொடர்பிலும் இதற்கு பொறுப்பான அமைச்சரும் அதிகாரிகளும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.