ஆங் சான் சூக்கிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை!

இராணுவ சதிப்புரட்சி மூலம் கடந்த பெப்ரவரியில் பதவி கவிழ்க்கப்பட்ட மியன்மாரின் சிவில் தலைவர் ஆங் சான் சூக்கி, குறைந்தது மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

நோபல் விருது வென்ற 76 வயதான சூக்கி கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதோடு பல குற்றச்சாட்டுகளுக்கும் முகம்கொடுத்துள்ளார். எனினும் அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற வழக்கில் அவருக்கு உரிமம் பெறாத வோக்கி டோக்கிகளை வைத்திருந்ததற்காக இரண்டு ஆண்டுகளும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறியதற்காக இரண்டு ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட நீதிமன்றம் ஒன்றிலேயே சூக்கி மீதான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மொத்தமாக 100 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் மேலும் இரு குற்றச்சாட்டுகளில் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு பின்னர் இராணுவ ஆட்சியால் அது பாதியாக குறைக்கப்பட்டது.

இதன்படி புதிய தண்டனையுடன் சூக்கியின் சிறைக்காலம் மொத்தம் ஆறு ஆண்டுகளாக உள்ளது.

இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதோடு இதுவரை 1,303 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு, 10,600க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles