ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது. தொடர்ந்து சூப்பர் 4 சுற்றிலும் 3 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்திருந்தது.
அதே வேளையில் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றில் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்தது.
ஆசிய கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி முதன்முறையாக தற்போதுதான் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. அந்த அணி லீக் சுற்றில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், சூப்பர் 4 சுற்றில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணியிடம் தோல்வி அடைந்திருந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 8 முறை சாம்பியன் பட்டம் (1984, 1988, 1990, 1995, 2010, 2016, 2018, 2023) வென்றுள்ளது. இதில் 7 முறை 50 ஓவர் போட்டி வடிவிலும், ஒரு முறை டி 20 வடிவிலான தொடரிலும் (2016-ம் ஆண்டு) இந்தியா வாகை சூடி உள்ளது.
பாகிஸ்தான் அணி 2000 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது. இந்த இரு முறையும் 50 ஓவர் வடிவில் தொடர் நடத்தப்பட்டிருந்தது. டி 20 வடிவில் பாகிஸ்தான் அணி தற்போதுதான் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.










