‘ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்போம்’ – தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம்

இலங்கையின் கல்விச் சேவை சமூகத்தின் உரிமை, சுதந்திரம் மற்றும் தற்போது இரண்டரைமாத காலமாக முன்னெடுத்து வரும் சம்பள முரண்பாட்டுக் கோரிக்கை ஆகியவற்றுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஸ்டிக்கப்போவதாக தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கச் செயலாளர் எஸ்.பாலசேகரம், தலவாக்கலையில் இன்று (05) காலை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

தலவாக்கலை வீவ்ரெஸ்ட் வரவேற்பு விடுதியில் இடம்பெற்ற இந்த ஊடகச் சந்திப்பை, சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாலசேகரம் தலைமை தாங்கி நடத்தினார்.

இதில், சங்கத்தின் உப தலைவர் ஆசிரியர் பி.சற்குனராஜா மற்றும் சங்கத்தின் பிரதான ஆலோசகரும் சிரேஸ்ட ஆசிரியருமான டி.உமாசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர், “கல்விச் சேவையில் உள்வாங்கப்பட்டுள்ள கல்விச் சமூகத்தினர், தாய்நாட்டை நிர்வாகம் செய்யும் உயரிய தலைவரிடத்தில் கல்விச் சமூகம் எதிர்கொண்டுவரும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட கல்விச் சேவை பிரச்சினைகளை மீண்டும் கோரிக்கையாக முன்வைக்கிறோம்” என்று தெரிவித்தார்.

“அதேநேரத்தில், ஒரு பிள்ளை தனக்குப் பசியென்று, அல்லது தனது தேவையைப் பூர்த்தி செய்யுங்கள் என்று பெற்றோரிடமே கேட்கிறது. இந்நிலையில், அப்பிள்ளையின் கோரிக்கையைத் தண்டித்து, அதை நிறுத்துவதா அல்லது ஓரளவேனும் பிள்ளையின் நியாயமான கோரிக்கையை மதித்து நிறைவேற்றி மகிழ்விப்பதா என்பதைப் பெற்றோர்களே தீர்மானிக்க வேண்டும். அவ்வாறே நாமும் தாய்நாட்டுத் தலைவர்களிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

“இந்த நாட்டில் வானம் தொடும் பொருட்களின் விலை அதிகரிப்பு, வாழ்க்கை சுமை, கடன்படும் நிலை அரச சேவையில் குறைந்த வருமானம் பெறும் ஆசிரியர் சமூகத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.

“இவ்வாறு இக்கட்டான கஸ்ட நிலையில் வாழக்கூடிய நிலையில், கல்விச் சமூகத்தினர் எதிர்கொண்டு வாழ்வதுடன், கடன் சுமையால் சமூகத்தில் மதிப்புகளையும் இழந்து வருகின்றன்” எனச் சுட்டிக்காட்டினார்.

“கல்விச் சமூகத்தில் ஆசிரியர், அதிபர்களின் வாழ்வு ஒரு கேள்வி குறியாக மாறியுள்ள நிலையில், நாம் சேவை செய்யும் தாய் நாட்டின் தலைவர்கள், எமது கோரிக்கைகளைப் புரிந்துகொண்டு சிறந்த தீர்வை வழங்கக் கோரி போராடி வருகின்றோம்.

“அதேபோல, எமது கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து தீர்வை வழங்குவது தலைவர்களின் பெறுப்பாகும். இன்று, தாய் – தந்தையர்களுக்கு அடுத்த நிலையில் ஆசிரியர்களே காணப்படுகின்றனர். இவர்கள் நாட்டில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்துக்கு வெளிச்சத்தை ஊட்டுவதற்கு அர்பணிப்புடன் சேவையாற்றுவதும் ஆசிர்கள் தான் என்பதை உணர வேண்டும்.

“இந்த நாட்டில் சுகாதாரச் சேவை, போக்குவரத்துச் சேவை, விமானச் சேவை, வங்கிச் சேவை உள்ளிட்ட பல அரச சேவைகளில் ஈடுப்படுவோருக்கு மேலதிக கொடுபனவுகள் வழங்கப்படுகிறது. ஆனால், இதே அரச சேவையில் அர்பணிப்புடன் சேவையாற்றும் ஆசிரியர் சமூகத்துக்கு மேலதிகச் சேவை கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை.

“மாறாக, சேவை நேரக் கொடுப்பனவாக நிர்ணயிக்கப்படும் சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டு, மேலதிக நேர வேலைக்கு நாம் அர்பணிப்புடன் நேரத்தைக் கவனிக்காது செயற்படுகிறோம். இந்த நிலையில், எமது வாழ்க்கை சொல்லொனாத் துயரத்தை நோக்கிச் செல்வதால் தமது சம்பள முரண்பாட்டைத் தீர்க்குமாறு வீதிகளில் இறங்கி போராடுகிறோம்.

“இவ்வாறு உரிமைக்காகப் போராடும் சந்தர்ப்பங்களில் எமது உரிமை பறிக்கப்படுகிறது. எமது நிலைப்பாட்டை வெளிக்கொணர முடியாது. சுதந்திரங்கள் இழங்கப்பட்டு பாதுகாப்புப் பிரிவினரால் வஞ்சிக்கப்படுகிறோம். நசுக்கப்படுகிறோம். ஆனால், இதுவரை நாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கும் போராட்டத்துக்கும் தீர்வுகள் எட்டப்படவில்லை.

“ஆகவே, இழைப்பின் அடையாளம் துக்கமாகக் காணப்படுவதால், இவ்வாண்டு ஒக்டோபர் 06ஆம் திகதியன்று கொண்டாடப்படும் ஆசிரியர்கள் தினத்தை துக்க தினமாகக் கல்வி சமூகம் அனுஷ்டிக்க தயாரகவுள்ளது.

“அதேநேரத்தில், அதிபர், ஆசிரியர்கள் சங்கங்கங்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க ஏகமானதாக தீர்மானித்துள்ளது. அந்தவகையில் ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கமும் தயாராகியுள்ளது. இதற்கமைய நாட்டில் சகல ஆசிரியர்கள் வீடுகளிலும் கறுப்புக் கொடிகளை பறக்க விடவுள்ளோம். எமது உரிமைகள், கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு செல்ல இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என, அவர் மேலும் தெரிவித்தார்.

நிருபர் – டி.சந்ரு

Related Articles

Latest Articles