ஆயிரம் ரூபா விடயத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை ‘பல்டி’ அடிக்க முடியாது. கம்பனிகள் இழுத்தடிப்பு செய்வதால் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் உடன் வெளியேறவேண்டும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி தேர்தலின்போதும், அதன்பின்னரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கினார். ஆயிரம் ரூபா தொடர்பான யோசனையை நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பாதீடு ஊடாக முன்வைத்தார்.
தாம் ஆளுங்கட்சியில் இருப்பதாகவும், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆசிர்வாதம் இருப்பதாலும் ஆயிரம் ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் என்ற உத்தரவாதத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் வழங்கியது. ஆனால் தற்போது ஆயிரம் ரூபா விடயத்தில் ‘பல்டி’யடிப்பதற்கு காங்கிரஸ் முயற்சிக்கின்றது.
தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்கமுடியாது. ஆகவே, கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறினால் அனைவரும் இணைந்து, தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக போராடலாம்.