தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நாளை (23) ஹட்டனில் நடைபெறவுள்ளது.
கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், எம்.பிக்களான வேலுகுமார், அரவிந்தகுமார் மற்றும் உதயகுமார் ஆகியோருக்கே இவ்வாறு வரவேற்பளிக்கப்படவுள்ளது.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து தொலைபேசி சின்னத்தின்கீழ் போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா, கண்டி, பதுளை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் வெற்றிபெற்றது.
இரத்தினபுரி, கேகாலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போட்டியிட்ட கூட்டணியின் வேட்பாளர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.பியுமான திலகருக்கு இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
முன்னாள் எம்.பி. என்ற அடிப்படையிலும் சங்கம் மற்றும் கூட்டணியில் முக்கிய பதவியை வகிப்பதாலும் திலகருக்கு அழைப்பு விடுக்கப்படவேண்டும் என சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தாலும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.