” இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இல்லாமை பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், அமைச்சர் ஜீவன் தொண்டமானும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனும் பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருப்பதானது மலையக மக்களுக்கு பெரும் சக்தியாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் விட்டுச் சென்ற சேவைகள் அனைத்தும் அவர்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செந்தில் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது மலையக மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் அதேவேளை, அதன் தலைவராக இருந்து மறைந்த ஆறுமுகன் தொண்டமான் மீதும் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தனர்.
அவர் இல்லாத பாரராளுமன்றம் என்பது எமக்கும் மலையக மக்களுக்கும் பெரும் மனவருத்தமான விடயமாகும். ஆனபோதிலும் அவரது பணிகள் அனைத்தும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் ஊடாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்படும்.
அதேவேளை, தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள எஸ். வியாழேந்திரனுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன்.
அதன்போது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக தபால்தலை வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் முன்வைத்துள்ளேன். அந்தக் கோரிக்கையை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் எஸ். வியாழேந்திரனுக்கு எனது நன்றிகளை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.