இந்தியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றியை பெற்றது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அதன்பின்னர் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியில் பங்கேற்றது.
இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்திலும், சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த 2அவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தியது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் இன்று நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச் ரன் எதுவும் இன்றி நடையைக் கட்டினார். மற்றொரு துவக்க வீரரான மேத்யூ வேட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஸ்மித் 24 ரன்களில் வெளியேறினார். பின்னர் கிளென் மேக்ஸ்வெல் உடன் ஜோடி சேர்ந்த வேட் இந்திய அணியின் பந்து வீச்சை விளாசித்தள்ளினார். 53- பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 80 ரன்கள் அடித்த நிலையில், வேட் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 54 ரன்களில் நடராஜன் பந்தில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186- ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 187-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை துவக்கியது.
இந்திய அணியின் துவக்க வீரர் கேஎல் ராகுல் ரன் எதுவும் இன்றி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து, 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் மறு முனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.
ஷிகர் தவான் ( 28 ரன்கள்), சஞ்சு சாம்சன் (10 ரன்கள்) ஷ்ரேயாஸ் ஐயர் (0) ஹர்திக் பாண்ட்யா (20 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், விராட் கோலி தனி ஒருவராக வெற்றிக்கு போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிரடியாக ஆடி வந்த விராட் கோலி 18.1 ஓவரில் 85 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 61 பந்துகளை சந்தித்த விராட் கோலி 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசினார். விராட் கோலி ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் வெற்றிக்கனவும் தகர்ந்து போனது.
20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியால் 174 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.