எழுத்து – முனைவர் குமாரவேலு கணேசன் (நிறுவுநர்- STEM-Kalvi, இயக்குநர்- உயிர்ப்பூ )

இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்துவந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் குடியேற்றப்பட்டு இவ்வாண்டுடன் 200 வருடங்கள் நிறைவு பெறுகின்ற போதிலும் அவர்களின் வாழ்வியல் இன்றும் மிக மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது.
19 ஆம் நூற்றாண்டில் இந்தியக் குடிப் பெயர்வு
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் இடம் பெயர்ந்தனர். உலகின் பிற பகுதிகளில், குறிப்பாக இலங்கை, தென்னாபிரிக்கா, பிஜி, கயானா, ட்றினிடாட் மற்றும் மொரீஷியஸ் போன்ற பிரித்தானியாவின் குடியேற்ற நாடுகளில் நிலவிய பொருளாதார வாய்ப்பு இவ்விடப்பெயர்வின் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். இந்தக் குடியேற்ற நாடுகளுக்கு தொழிலாளர் தேவை இருந்ததால், மேலும் பல இந்தியர்கள் இந்த இடங்களில் கிடைக்கும் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தயாராக இருந்த போது வேறும் பல அக, புறக்காரணிகள் அவர்களின் வெளியேற்றதிற்கு ஊக்கியாக மாறின.
இந்திய அரசியல் சூழ்நிலையும் இடம்பெயர்வதற்கான மற்றொரு முக்கியமான காரணமாகும். அக்காலகட்டத்தில் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் இந்திய மக்கள் மீது கடுமையான சட்டங்களையும் ஒடுக்கு முறைகளையும் அப்போது விதித்துக்கொண்டிருந்தது . பரவலான வறுமை மற்றும் ஒடுக்குமுறைக்கு வழிவகுத்தது.
உதாரணமாக இந்தியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பட்டு, வாசனைத்திரவியங்கள் போன்ற பொருட்களுக்கு ஆரம்பத்தில் அதிக வரி விதிக்கப்பட்டு பின்பு முற்றாகத் தடை செய்யப்பட்டது. வேறும் பல உள்நாட்டு உற்பத்திகளுக்கு உயர் வரி விதிக்கப்பட்டது. பிரித்தானியாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 2-3 % வரியும், இந்தியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 20-30% வரியும் விதிக்கப்பட்டது.
இவ்வாறான செயற்பாடுகள் சுதேச உற்பத்திகள் முற்றாக முடங்கிப் போகவும் வறுமை தலைவிரித்தாடவும் வழிவகுத்தது. ஆங்கிலேய அதிகாரிகளால் விதிக்கப்பட்ட கொடுமையான நிலவரி முறை இன்னொரு உதாரணமாகும். சென்னை மாகாணத்தில் விளைபொருட்களின் அரைப்பங்கு வரியாக அறவிடப்பட்டது.
இப்படியான திட்டமிட்ட ஒடுக்குமுறையால் 1799 – 1834 ஆண்டு காலகட்டத்தில் 40 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்தியாவின் தென் மாகாணங்களில் பஞ்சத்தால் இறந்து போயினர். பல இந்தியர்கள் இந்த நிலைமைகளில் இருந்து தப்பிக்க உலகின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்து அதிக சுதந்திரத்துடனும் கண்ணியத்துடனும் வாழ முயன்றனர். இவற்றுக்கப்பால், இந்தியாவில் உள்ள சாதி அமைப்பும் மக்கள் இடம்பெயர்வதில் பெரும் பங்கைக் கொண்டிருந்தது.
தாழ்த்தப்பட்ட சாதியினர் பெரும்பாலும் இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்பட்டதுடன் அவர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பாகுபாடுகளை எதிர்கொண்டதனால் அவர்கள் வேறு இடங்களில் சிறந்த வாய்ப்புகளைத் தேட முற்பட்டனர்.
ஒட்டு மொத்தமாக, 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து மக்கள் இடம்பெயர்வது என்பது பொருளாதார, அரசியல் மற்றும் சமூகக் காரணிகளின் கலவையால் உந்தப்பட்ட ஒரு சிக்கலான நிகழ்வாகும். இந்த இடம்பெயர்வு இந்தியாவை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் அவர்கள் விட்டுச் சென்ற சமூகங்கள் மீது நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது.
மலையகத் தொழிலாளர்களின் இலங்கை வருகை
ஆங்கிலேய ஆளுநராக பிரெட்றிக் நோர்த் கடமையாற்றிய 1798 – 1815 காலப்பகுதியிலேயே இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படத் தொடங்கி விட்டனர். இவர்கள் பெரும்பாலும் வீதிகள், பாலங்கள் அமைப்பதற்காக ஒப்பந்தகாரர்களால் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் இந்தியாவில் இருந்து படகுகள் மூலம் தலைமன்னாருக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து மூன்று மாதகால நடைப்பயணங்களின் பின்னர் தேவையான இடங்களுக்குச் சென்றனர்.
இலங்கையில் கோப்பிப் பயிச்செய்கை ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டபோது பெருந்தோட்டத் தொழிலுக்காக தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்து 1823 இல் முதன் முறையாகக் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள், கொடிய விசப்பாம்புகள், மனிதரைக் கொல்லும் சிறுத்தைகள், உயிர்க்கொல்லி மலைக்குளவிகள் நிறைந்த மலையகக் காடுகளுக்குள் குடியேற்றப்பட்டு இவ்வருடத்துடன் இரண்டு நூற்றாண்டுகள் நிறைவு பெறுகின்றன.
1830 ஆம் ஆண்டளவில் பிரித்தானியா நிறைவேற்றிய அடிமைகள் தடைச்சட்டத்தின் பின்பாக பெருமளவான தொழிலாளிகள் இந்தியாவில் இருந்து கோப்பித் தோட்டங்களுக்காக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர். 1839- 1859 ஆண்டுக்கு இடைப்பட்ட 20 வருட காலத்தில் மாத்திரம் 9 இலட்சம் இந்தியத் தொழிலாளர்கள் கோப்பிப் பயிர்ச் செய்கைக்காக கொண்டு வரப்பட்டனர் என்றும் பின்பு அதில் அரைப் பங்கினர் இந்தியாவுக்குத் திரும்பி விட்டனர் என்றும் குறிப்புக்கள் கூறுகின்றன.
1865 ஆம் ஆண்டளவில் 75% ஆன தொழிலாளர்கள் ஆண்களாகவும் 18% ஆன தொழிலாளர்கள் பெண்களாகவும் 7% சிறுவர்களாகவும் இருந்துள்ளனர். பிற்காலப் பகுதியிலேயே பெருமளவில் பெண்களும் தொழிலாளர்களாகவும், திருமண பந்தங்கள் மூலமாகவும் இலங்கையின் மலையகப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டனர் என்று தெரியவருகின்றது.
இந்தியாவில் இருந்து இலங்கையில் வந்து குடியேறியோரை பெருந்தோட்டம் சார்ந்த இந்தியத்தமிழர், பெருந்தோட்டம் சாராத இந்தியத்தமிழர் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கைக்கு வியாபார நோக்கமாக வந்த நாட்டுக்கோட்டைச் செட்டிமார், மற்றும் அவர்களுக்கு உதவியாக வந்தவர்கள் இந்தப் பெருந்தோட்டம் சாராத இந்தியத் தமிழர்களுக்கு உதாரணமாகும். பெருந்தோட்டம் சார்ந்த இந்தியத்தமிழர்களில் பெரும்பான்மையோர் திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்தும், பெருந்தோட்டம் சாராத இந்தியத்தமிழர்கள் பெரும்பாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வந்ததாக குறிப்புக்கள் மேலும் சொல்கின்றன. எந்தப்பிரதேசங்களில் இருந்து எத்தனை வீதமானோர் இலங்கைக்கு வந்தனர் என்ற முழுமையான விபரம் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

(அட்டவணை1. 19ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்ட இந்திய தொழிலாளர்களின் சொந்த மாவட்டங்கள். (V.நித்தியானந்தன்)
.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் Rust decease என்னும் பங்கசு நோய்த் தாக்கத்தால் கோப்பிப் பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்பட, தேயிலைப் பயிர்ச் செய்கை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை உலகின் முதல்தர தேயிலையாக வெற்றி நடை போடுகின்றது.
பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தில் பல அமைப்புகளின் முயற்சியினால் இந்தப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன.
இந்த மக்களின் உரிமைகளுக்காக போராடியவர்களில் கோதண்டராம நடேசய்யர் (1887-1947) முக்கியமானவர். இவர் வியாபார நோக்கமாக இலங்கை வந்திருந்தபோது மலையக மக்களின் துன்பங்களை அறிந்து அங்கேயே தங்கியிருந்து அவர்களின் உரிமைகளுக்காக அயராது பாடுபட்ட ஒருவராவார்.
ஆனால் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னான காலப்பகுதியில், முக்கியமாக பெருந்தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டதன் பின்பாக தொழிலாளர்கள் வாழ்வில் பூகம்பம் வீசதொடங்கியது.
இலங்கையின் சுதந்திரத்தின் பின்னான மலையகத் தமிழர்களின் வாழ்க்கை
இலங்கை சுதந்திரமடைந்த சில மாதங்களிலேயே 1948 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தின் காரணமாக இலங்கயின் சனத்தொகையின் 15% ஆகவிருந்த இந்திய வம்சாவளி தமிழர்களில் 7 இலட்சம் பேர் நாடற்றவர் ஆக்கப்பட்டனர். இதன் காரணமாக அவர்களின் சனத்தொகை 4% ஆக குறைக்கப்பட்டது.
1964 ஆம் ஆண்டு செய்யப்பட்ட சிறிமா- சாஸ்திரி உடன்படிக்கையின் பிரகாரம் நாடற்றவராக இருந்தவர்களில் 525,000 பேரை இந்தியா தொகுதி தொகுதியாக அடுத்த 15 ஆண்டுகளின் எடுத்துக்கொண்டது. இவர்கள் தலைமன்னார் ஊடாக கப்பலில் ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டு மண்டபம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பின்பு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் குடியேற்றப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் மதுரையை அண்டிய பிரதேசங்களில் குடியேற்றப்பட்டனர் என்றும், ஆனால் அவர்களும் அங்குள்ளவர்களால் விரும்பப்படாமல் மிகவும் கடின வாழ்க்கையையே வாழ்கின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. பலர் மூணாறு போன்ற இடங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் சென்று தமக்குத் தெரிந்த வேலையைச் செய்கின்றனர்.
ஈழப்போருக்குப் பின்னான மலையகத் தமிழர்களின் வாழ்வியல்
இறுதி ஈழப்போருக்குப் பிந்திய காலகட்டத்தில் இலங்கையில் தேசியவாத உணர்வுகள் அதிகரித்துள்ளதுடன், மலையகத் தமிழர்கள் உட்பட சிறுபான்மையினரின் பாகுபாடும் அவர்கள் ஒடுக்கப்படுவதும் அதிகரித்து வருகின்றது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் நாட்டின் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் தொடர்ந்து முக்கியமான பங்காற்றி வருகின்றனர். அவர்கள் நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருவதுடன் கல்வி, அரசியல் மற்றும் கலை போன்ற துறைகளிலும் பெரும் பங்களிப்பு செய்து வருகின்றனர்.
சமீப ஆண்டுகளில், இலங்கையில் மலையகத் தமிழர்களின் நிலைமை மிகவும் சிக்கலானதாகவும் கடினமாகவும் மாறியுள்ளது. 1958, 1977, 1983 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்கள் 2009 இல் முடிவடைந்த உள்நாட்டுப் போராலும் மிகவும் பாதிகப்பட்டனர். பல இந்தியத் தமிழர்கள் விடுதலைப் போராட்ட இயக்கங்களில் இணைந்து போராடி வீரமரணமடைந்தனர். பல குடும்பங்கள் வட மாகாணத்தில், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் குடியேறின.

2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின்படி மத்திய, சப்பிரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவழி மலையக மக்களே. அவர்களும் தம்மை இலங்கைத்தமிழர் என்று குடிசன மதிப்பீட்டுப் பத்திரத்தில் பதிவதால் உத்தியோக பூர்வமாக அவர்களின் தொகை இனிமேற் காலங்களில் பிரித்தறியப்பட முடியாமல் போகலாம்.
தங்களின் பூர்வீகத்தை தெளிவாகப் புரிந்துக்கொள்ளாமல் அல்லது குடிசன மதிப்பீட்டு அலுவலகர்களின் போதிய பயிற்சியின்மையால் இலங்கைத் தமிழர்களாக இவர்கள் தம்மைப் பதிவு செய்து கொள்கின்றார்கள். குடிசன மதிப்பீட்டு சட்டவிதிமுறைகளின்படி தொடர்ந்து அடுத்து வரும் 5 குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பில் 5% க்கும் குறைவாக இருக்கும் இனம் குடிசனப் பதிவேட்டில் இருந்து நீக்கப்படும் ஆபத்து இருப்பதாக சொல்லப்படுகின்றது.
2012 ஆம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின்படி மத்திய, சப்பிரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் மாத்திரம் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் குடித்தொகை வடமாகாணத்தின் சனத்தொகையிலும் பார்க்க அதிகமானது என்ற புள்ளிவிபரம் பலரையும் ஆச்சரியமூட்டலாம்.
200 வருடம் கழிந்தும் இன்றும் பல மலையக மக்கள் லயன்கள் என்றழைக்கப்படும் லைன் ஹவுஸ் (Line House) களில் வாழ்ந்து வருவது எவ்வகையில் நியாயமாகும்?
இவர்களின் வரலாற்றைப் பற்றி பெரியளவில் தெரிந்திராத தமிழ் மக்கள் இன்னமும் எம்மத்தியில் இருக்கின்றனர் என்பது உங்கள் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 14 கிலோமீற்றர் நடந்து பாடசாலைக்கு சென்று கல்வி கற்று மீண்டும் 14 கிலோமீற்றர் நடந்து திரும்பிவரும் மாணவர்கள் இன்றும் மலையகக் கிராமங்களில் உள்ளனர் என்றால் நம்புவீர்களா?
நேரடியாக இந்தப்பிரதேசங்களுக்கு சென்று இந்த மக்களின் துயரங்களைப் பார்க்க, உதவ முடியாதவர்கள் பாலாவின் பரதேசி திரைப்படம் பார்த்தீர்கள் என்றால் இம்மக்களின் வாழ்வியலையும் துயரங்களையும் ஓரளவுக்கு புரிந்துகொள்ளலாம்.
நன்றி – எதிரொலி
