ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்கு பிறகு மே.தீவுகள் அணி பெற்ற மகத்தான வெற்றி….!

ஆஸ்திரேலிய அணியை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி – 20 தொடர்களில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி, மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்சில் 311 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஜோஷ்வா டி சில்வா 79 ஓட்டங்களைப் பெற்றார். ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 289 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

22 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி 2-வது இன்னிங்சில் 193 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட், லயான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 216 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் ஆடியது. 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 60 ஓட்டங்கள் பெற்றிருந்தது.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஸ்மித் தனி ஆளாகப் போராடி அரை சதமடித்தார். ஷமார் ஜோசப் சிறப்பாக பந்து வீசி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இறுதியில், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடிந்தது.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

Related Articles

Latest Articles