இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது இந்தியா – 317 ஓட்டங்களால் அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

அதிகபட்சமாக ரோகித் சர்மா 161 ரன்னும், ரஹானே 67 ரன்னும், ரிஷாப் பண்ட் ஆட்டம் இழக்காமல் 58 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 134 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஆர்.அஸ்வின் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, அஸ்வினின்(106 ரன்கள்) அபார சதம், விராட் கோஹ்லியின் (62 ரன்கள்) பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் 286- ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 482 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.

இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து திணறியது. இன்று 4- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணியின் அக்‌ஷர் படேல், அஸ்வின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். 54.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 164- ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 317- ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனான அஸ்வின் தெரிவுசெய்யப்பட்டார். முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

Related Articles

Latest Articles