இணைந்து பயணிக்க தமிழ்த் தேசியக் கூட்டணி நிபந்தனையற்ற ஆதரவு!

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்குத் தயாராகவுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் முதன்மைக் கட்சியாக இருந்தாலும் கூட தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு உண்டு. அந்தப் பொறுப்பை ஏற்று அதற்கான பணிகளை இந்த வருட ஆரம்பத்தில் நாங்கள் தொடங்கியுள்ளோம்.

கடந்த உள்ளூராட்சி சபை, நாடாளுமன்றத் தேர்தலின்போது எதிரும் புதிருமாறு நின்ற ஜனநாயகத் தேசியக் கூட்டணியுடனான ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம். அதில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் தனித்துவங்களைப் பேணிக்கொண்டு செயற்படுவது என்ற இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம்.

மீண்டும் எங்களுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள் என்று நானும் எமது கட்சியின் பொதுச்செயலாளரும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். அந்த அழைப்பைத் தொடர்ந்து எங்களுடன் அவர்கள் பேசினார்கள். ஜனநாயகத் தேசியக் கூட்டணியைப் பொறுத்த வரையில் அவர்கள் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை.

பரந்தமனப்பான்மையுடன் எங்களுடன் பேசினார்கள். அவ்வாறானதொரு நிபந்தனையற்ற இணைவுகளை ஏனையவர்களிடம் இருந்தும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

சிங்கள தேசியக் கட்சிகளால் எங்களுக்கு விடிவு கிடைக்காது. அவர்களது கட்சிக்குள் எங்களது மக்களும் ஊடுருவி நாடாளுமன்ற உறுப்பினர்களாக, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். ஆனால், அவர்களுக்குச் சிங்களத் தலைமைகளுக்கு மேலாகச் செல்ல முடியாது.” – எனவும் தமிழரசுக் கட்சி தலைவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles