பொலிஸ், காணி அதிகாரங்கள் உட்பட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் நிலைப்பாட்டிலேயே ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இருக்கின்றனர். எனவே, நாட்டை காக்க தேசப்பற்றுள்ள மக்கள் முன்வர வேண்டும் – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்தார்.
அத்துடன், வரிசை யுகம் முடிந்துவிட்டது எனக் கூறப்பட்டாலும் கடனை மீள செலுத்த ஆரம்பிக்கும்போதுதான் பிரச்சினை தலைதூக்க ஆரம்பிக்கும் எனவும் அவர் கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ குழிக்குள் விழுந்த நாட்டை மீட்கும் பயணத்தையே ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்கின்றார் என சிலர் நினைக்கலாம். உண்மை அதுவல்ல குழிக்குள் உள்ள நாட்டை புதைக்கும் வகையிலேயே அவரின் பயணம் அமைந்துள்ளது. இதனை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மறுபுறத்தில் இந்தியாவின் தேவைகள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. மன்னார் காற்றாலை திட்டம்கூட அதானிக்கு வழங்கப்படவுள்ளது. டெலிகோமையும் விற்க முற்படுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என அநுரகுமார திஸாநாயக்க கூறுகின்றார் . பொலிஸ், காணி அதிகாரங்களும் வழங்கப்படுமாம். சஜித் பிரேமதாசவும் வடக்குக்கு சென்று இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். ரணிலும் இதனை செய்வதற்கு தயார்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அமைப்பே சர்வஜன அதிகாரமாகும். தவறுகளை திருத்திக்கொண்டு முன்னோக்கி செல்வோம். வெளிநாட்டவர்களின் காலனித்து நாடாக இலங்கையை மாற்றும் முயற்சியை தோற்கடிப்போம். அதற்காக அணிதிரள்வோம்.” – என்றார்.