ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய், அபுதாபி நகரங்களில் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தியது. அதைப் போலவே தனது முதல் ஆட்டத்தில் ஓமன் அணியை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.
இந்நிலையில் தனது 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானைச் சந்திக்கிறது இந்திய அணி. இன்று இரவு 8 மணிக்கு துபாய் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோர் இன்றைய ஆட்டத்திலும் தங்களது திறமையை நிரூபிக்கக் கூடும்.
அதைத் தொடர்ந்து விளையாட வரும் திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா என இந்திய அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.
ஆல்-ரவுண்டரான அக்சர் பட்டேலும் பேட்டிங்கில் எதிரணிக்கு சவால் விடக்கூடியவர். எனவே, இவர்களிடமிருந்தும் சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம். அதேபோல் பவுலிங்கில் ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களது உயர்மட்டத் திறனை வெளிப்படுத்தக்கூடும்.
அதேநேரத்தில் பாகிஸ்தானும் முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் சஹிப்சதா பர்ஹான், சயீம் அயூப், விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ், பகர் ஸமான், ஹசன் நவாஸ், முகமது நவாஸ் ஆகியோரிடமிருந்து சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்.
அதேபோல் பவுலிங்கில் ஷாஹீன் ஷா அப்ரிடி, சயீம் அயூப், அப்ரார் அகமது, முகமது நவாஸ், சுபியான் முகீம், பஹீம் அஷ்ரப் ஆகியோர் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்த முயற்சி செய்வர்.