இந்தியில் ‘ரீமேக்’ ஆகிறது விஜய்யின் ‘மாஸ்டர்’

தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ‘ரீமேக்’ செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏற்கனவே லாரன்சின் காஞ்சனா படம் அக்‌ஷய்குமார் நடிக்க லட்சுமி என்ற பெயரில் இந்தியில் வெளியானது. நயன்தாராவின் கோலமாவு கோகிலா படம் குட்லெக் ஜெர்ரி என்ற பெயரில் இந்தியில் தயாராகிறது. இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஶ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

கார்த்தி நடித்த கைதி, விஜய்சேதுபதியின் விக்ரம் வேதா ஆகிய படங்களும் இந்தியில் தயாராகின்றன. ஶ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, முனீஸ்காந்த் ஆகியோர் நடித்து 2017-ல் வெளியான மாநகரம் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த வரிசையில் பொங்கலுக்கு திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற விஜய்யின் மாஸ்டர் படமும் இந்தியில் ‘ரீமேக்’ ஆக உள்ளதாக அறிவித்து உள்ளனர். இதில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷனிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

Related Articles

Latest Articles