”திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கியிருந்தால், இன்று அவை காலியாக இருந்திருக்காது. அவை நிரம்பியிருந்தால் இன்று எமது வாகனங்களின் ஏரிபொருள் தாங்கிகள் காலியாக இருந்திருக்காது. நாமும் வரிசையில் நின்றிருக்கத் தேவையில்லை. எமது வயிறுகளும் காலியாக இருந்திருக்காது. எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்புக்கள் வந்தன. திருகோணமலையின் அபிவிருத்தியில் இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு செல்ல முடியாது.” என்று அண்மையில் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
ஒரு காலத்தில் இலங்கைப் போன்று வளர வேண்டும் என்று சிங்கப்பூர் திட்டமிட்டது. இன்று சிங்கப்பூர்போல் எப்போது நாம் வளர்வோம் என்று இலங்கையர்கள் ஏங்கி நிற்கின்றனர். சிங்கப்பூரில் குடிநீர்கூட மலேசியாவில் இருந்து கொண்டுவரப்படுகிறது. அனைத்தும் வெளிநாட்டு முதலீடுகள்.

ஆனால் இலங்கையை சிங்கப்பூர் போன்று வளர்த்தெடுப்பதற்கு கனவு காணும் இலங்கையர்களுக்கு தடையாக சில அரசியல்வாதிகளும், தொழிற்சங்கங்களும் இருக்கின்றன. அண்டைய நாட்டுடன் மேற்கொள்ளும் உறவு முறையிலேயே ஒரு நாட்டின் அபிவிருத்தி தங்கியிருக்கிறது. குறிப்பாக இலங்கை போன்ற ஒரு நாடு, ஆசியாவில் பலம்பொருந்திய இந்தியா போன்ற நாட்டுடன் நட்புடன் நடந்துகொள்வது முக்கியமானது.
இதனை வடக்கு கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இதனால்தான் இந்திய உயர்ஸ்தானிகரின் வடக்கு கிழக்கு விஜயங்களின்போது அங்கு அதற்கு பெரும் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அதேபோல் ஏட்டிக்குப் போட்டியாக சீனத் தூதுவரும் வடக்கு கிழக்கு விஜயங்களை முன்னெடுத்திருந்தார். இந்த பயணங்களுக்கு கடுமையான எதிர்ப்புக்கள் ஏற்பட்டன. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சீனத் தூதுவரின் வடக்கு விஜயத்தை கடுமையாக எதிர்த்திருந்தனர்.
இந்திய உயர்ஸ்தானிகரின் அண்மைக்கால வடக்கு கிழக்கு விஜயங்களின் அர்த்தம் என்ன?
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஶ்ரீ கோபால் பாக்லே இம்மாதம் முதல் வாரத்தில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தார்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமானமான உறவு குறித்து பேசியிருந்தார். கலாசார, சமூக-பொருளாதார உறவு மற்றும் இந்தியா இலங்கை இடையிலான பல்பரிமாண ஒத்துழைப்புகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டும் பல்வேறு நிகழ்வுகளில் உயர் ஸ்தானிகர் கலந்துகொண்டார்.
மேலும், இந்தியாவின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திரசிகிச்சை அலகின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் உயர் ஸ்தானிகர் மீளாய்வு செய்தார்.

இந்தியா இலங்கை இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமையின் அடிப்படையில் மக்களின் நலன்களை மையப்படுத்திய இத்திட்டமானது நிறைவடையும் காலத்தை எட்டியுள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா இலங்கை இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமையின் அடிப்படையில் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளில் பல்வேறு அபிவிருத்தி திட்டப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலையில் உள்ள லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபன (LIOC) வளாகத்தில் மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்ததின நினைவு தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வொன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட உயர் ஸ்தானிகர், மகாத்மா காந்தி 1927இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதையும் இலங்கை மக்களுடன் அவரது நெருக்கமான உறவினையும் நினைவூட்டியிருந்தார்.

இதேவேளை, கடந்த சில மாதங்கள் உட்பட அண்மைய காலப்பகுதியில் இலங்கையின் சக்தித் தேவையை நிவர்த்தி செய்வதிலும் உற்பத்தித்துறையில் அதிகரித்துவரும் சக்தி தேவையினை பூர்த்தி செய்வதிலும் LIOCயின் வகிபாகத்தை உயர் ஸ்தானிகர் கேட்டிருந்தார்.
LIOC நிறுவனத்தால் அண்மையில் நிறுவப்பட்ட இலங்கையின் முதலாவது உராய்வு நீக்கி (கிறீஸ்) உற்பத்தி ஆலை மற்றும் இயந்திர ஒயில் கலப்பு நிலையம் ஆகியவற்றையும் உயர் ஸ்தானிகர் பார்வையிட்டார். அத்துடன் LIOC மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஒன்றிணைவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள மேல்நிலை எண்ணெய் தாங்கி தொகுதியின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையை சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் 400க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இந்த இருநாள் விஜயத்தின்போது மனிதாபிமான உதவி அடிப்படையிலான நிவாரணப் பொதிகளும் உயர் ஸ்தானிகரால் வழங்கப்பட்டன.
இந்திய உயர்ஸ்தானிகரின் கிழக்கு விஜயத்தின் பின்னரே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருகோணமலைக்குச் சென்றிருந்தார். திருகோணமலை அபிவிருத்தியில் இந்தியாவைப் புறந்தள்ளிவிட்டுப் பயணிக்க முடியாது என்பதை அவர் சுட்டிக்காட்டியதில் ஆழமான அர்த்தம் இருக்கிறது.
இலங்கை இந்திய நட்பிற்கு வானமே எல்லையாகிறது. எனவே இருதரப்பு நீண்டகால, ஆழமான வேரூன்றிய மற்றும் பன்முக நாகரிக உறவுகளைப் பார்க்கும்போது, இலங்கையுடனான இந்திய உறவுகளை வேறு எந்த நாடுகளுடனும் ஒப்பிட்டு பார்க்க டெல்லி விரும்பவில்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஒருமுறை தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையின் அல்லது அறிவிப்பின் அர்த்தம் என்பது மிக ஆழமானது. மிகவும் வளமான திருகோணமலை நகரில் அண்டை நாடான இந்தியாவின் முதலீடு என்பது மிக முக்கியமானது. இந்திய உயர்ஸ்தானிகரின் கிழக்கு விஜயம் இன்னும் பல முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவரும் என்றே நம்பப்படுகிறது. இது இலங்கை – இந்திய உறவை மேலும் வலுப்படுத்தும். நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழிவிட்டுள்ள இலங்கைக்கும் இதில் இருந்து மீள்வதற்கு பேருதவியாக இருக்கும்.










