நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி.
நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லிட்சிஃபீல்ட் 93 பந்துகளில் 119 ரன்கள் விளாசினார். எல்லிஸ் பெர்ரி 77 ரன்கள் எடுத்தார்.
339 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்தியா விரட்டியது. ஷபாலி வர்மா 10, ஸ்மிருதி மந்தனா 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஹர்மன்பிரீத் 88 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த தீப்தி சர்மா 24, ரிச்சா கோஷ் 26 ரன்கள் எடுத்தனர். மறுமுனையில் சதம் கடந்த ஜெமிமா, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 134 பந்துகளில் 127 ரன்கள் எடுத்தார். இந்திய அணிக்கான வெற்றி ரன்களை அமன்ஜோத் எடுத்தார். 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை (339 ரன்கள்) வெற்றிகரமாக எட்டிய அணி என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்த போட்டியில் ஜெமிமா பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை வென்றார். இந்த தொடரில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்த அவர், தனது திறனை இந்த ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தென் ஆப்பிரிக்க அணி உடன் இந்தியா மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் விளையாடுகிறது. இதில் வெல்கின்ற அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணியாக அறியப்படும்.
 
		 
                                    









