” இந்திய வீடமைப்பு திட்டத்தில் 10,000 வீடுகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. எனவே இந்த திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”- என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
‘ என்னை நாலாவது முறையாகவும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்த நுவரெலியா மாவட்ட மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நாட்டில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை நாங்கள் வரவேற்கின்றோம். நாங்கள் எதிர்கட்சியில் இருந்தாலும் பாராளுமன்றத்தில் இந்த அரசாங்கம் முன்னெடுக்கின்ற மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கு நிச்சயமாக ஒத்துழைப்பு வழங்குவோம்.
அதேநேரம் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எங்களுடைய பலமான எதிர்ப்பினை தெரிவிப்போம்.
இதுவரை காலமும் ஆட்சியினை கைப்பற்றுவதற்காகவும் ஆளுகின்ற அரசாங்கத்தினை கவிழ்ப்பதற்காகவும் இனவாதத்தினை, மதவாதத்தினை கையில் எடுத்து மக்களை பிரித்து ஆளுகின்ற நிலைமையே காணப்பட்டது.
ஆனால் தற்போதைய ஜனாதிபதியின் உரையில் இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என கூறுவது வரவேற்க கூடியது. உண்மையாகவே எமது நாடும் சமூகமும் பிந்தங்கிய நிலையில் இருப்பதற்கு காரணம் ஆட்சியாளர்கள் தங்களின் அரசியல் தேவைக்காக இன, மத ரீதியாக செயற்பட்டமையும் ஆகும். இனவாதம், மதவாதம் இல்லாத அனைத்து மக்களுக்கும் சமவுரிமை கிடைப்பதே எங்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்கள் கனிசமான அளவு இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளனர். ஜனாதிபதி தனது உரையிலே ஊழல் ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, திருப்தியான அரச சேவை, பொருளாதார அபிவிருத்தி என பல முக்கிய விடயங்களை சபையில் முன்வைத்திருந்தார்.
அவ்வாறான திட்டங்களுக்கு நிச்சயமாக முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம். எதிர்கட்சியில் இருந்து அரசு முன்னெடுக்கின்ற எல்லா விடயங்களையும் விமர்சிப்பது இலகுவானது. ஆனால் ஆட்சியினை கைப்பற்றி அதனை நடைமுறைப்படுத்துவது இலகுவானது இல்ல.
மலையகத்தை பின்னணியாகக் கொண்ட இருவர் அமைச்சரவையில் இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். அவர்களுக்கு மலையக மக்களின் சார்பில் என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மலையகத்தில் இதுவரை இருந்த அரசியல்வாதிகள் எல்லோரையும் குறைகூறினார்கள். இப்போது அவர்களுக்கு அரசாங்க பலம் கிடைத்துள்ளது அவர்கள் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கின்றோம்.
மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை என்பது 200 வருட பிரச்சினை. அதனை ஒரு இரவில் சரிசெய்துவிட முடியாது என்பதை நாம் அறிவோம். அதனை கட்டம் கட்டமாகவே முன்னெடுக்க வேண்டும்.
எங்களது ஆட்சி காலத்தில் அதற்கான சில முன்னெடுப்புகளை ஆரம்பித்து வைத்தோம். நல்லாட்சி காலத்தில் அமைச்சரவை அனுமதியுடன் உருவாக்கப்பட்ட மலையக பெருந்தோட்ட அபிவிருத்திக்கான தேசிய ஐந்தாண்டு திட்டம் ஒன்று உள்ளது. இந்த திட்ட முன்மொழிவினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மலையக அபிவிருத்திக்கென தனியானதொரு அதிகாரசபையினை நல்லாட்சிகாலத்தில் உருவாக்கினோம். இந்த அதிகாரசபை உருவாக்கத்தை வரவேற்று இன்றைய வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருமான கௌரவ விஜித ஹேரத் அவர்களும் ஆதரவு வழங்கி உரையாற்றியிருந்தார்.
கடந்த அரசாங்கத்தில் இந்த அதிகாரசபை சரியாக பயன்படுத்தப்படவில்லை. எனவே இந்த அரசாங்கம் இந்த மலையகத்திற்கான அதிகாரசபையினை சக்திமிக்கதாக மீள கட்டமைத்து அதனூடாக பணிகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
பிரதேச சபைகளை புதிதாக அதிகரித்தோம். 5 ஆக இருந்த நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களை 10ஆக அதிகரித்து அரச கட்டமைப்பில் மாற்றத்தினை கொண்டுவந்தோம். ஆனால் அது முழுமைபெறவில்லை இன்றுவரையும் முறையான கட்டிட வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் இல்லாத குறைபாடு உடைய செயலகங்களாவே இயங்கி வருகின்றது.
இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் இந்த நிலைமை மாற்றப்படும் என நம்புகின்றேன். நல்லாட்சி காலத்தில் பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமையினை உறுதி செய்யும் வகையில் 7 பேர்ச் காணி உறுதி பத்திரத்தினை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினூடாக வழங்கி வைத்திருந்தோம். அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான பணியே இந்த அரசாங்கத்திடம் உள்ளது. பெருந்தோட்ட மக்களுக்கு நாங்கள் வழங்கிய 7 பேர்ச் காணியை 10 பேர்ச் ஆக வழங்கினால் நன்றாக இருக்கும்.
மாடிவீடு என்பது மலையகத்தில் தோல்வி அடைந்த திட்டம். எனவே மாடி வீடு இல்லாத தனி வீட்டு திட்டத்தினை மீள இந்த அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும்.
இந்திய வீடமைப்பு திட்டத்தில் 10,000 வீடுகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. எனவே இந்த
திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.”- என்றார்.










