“வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளுக்கு தடங்கள் ஏற்படுத்தியமை இந்துக்களை அவமதிக்கின்ற ஒரு செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான ஆர்.ராஜாராம் தெரிவித்தார்.
“ இலங்கை ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான முழு உரிமையும் யாப்பின் மூலமாக அவரவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை தடை செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இந்த விடயத்தில் நாம் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றினைய வேண்டியது காலத்தின் கட்டமாக மாறியிருக்கின்றது.
இந்த செயற்பாடானது இலங்கையில் வாழுகின்ற அனைத்து இந்துக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. எனவே நாம் தொடர்ந்தும் வாய் மூடி மௌனிகளாக இருக்க முடியாது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அவர்கள் வெளியில் வருவதற்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றினைந்து சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு அந்த குடும்பங்களின் நிலையையும் அறிந்து அவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். இதன் மூலமாக நாம் அவர்களோடு இணைந்திருக்கின்றோம் என்பதை எடுத்துக் காட்ட முடியும்.
இந்த விடயத்தில் நாம் அனைவரும் கட்சி அரசியலுக்கு அப்பால் ஒன்றினைவது காலத்தின் தேவையாகும். இந்த செயற்பாட்டை முடிவிற்கு கொண்டு வராவிட்டால் தொடர்ந்தும் இலங்கை நாட்டில் இந்துக்கள் சமய வழிபாடுகளில் ஈடுப்பட முடியாத நிலை ஏற்ப்படலாம். எனவே இதனை நாம் அனைவரும் ஒன்றினைந்து முறியடிக்க தயாராக வேண்டும்.
குறிப்பாக இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறாத வண்ணம் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். அதற்;கு பாராளுமன்றத்தில் உள்ள எமது உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.