“எனது தந்தையை கைது செய்தாலும், செய்யாவிட்டாலும் இந்த ஆட்சியை நிச்சயம் கவிழ்ப்போம். இது பற்றி அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” – என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன தெரிவித்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன் பிணை நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சதுர சேனாரத்ன கூறியவை வருமாறு,
” ஊழல், மோசடிகளுக்கு எதிராக எனது தந்தை தொடர்சியாக போராடிவருகின்றார். 1994 இல் இலஞ்ச, ஊழல் தடுப்பு சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு ஆதரவாக செயற்பட்டார்.
2015 நல்லாட்சியின்போதும் ஊழல், மோசடிகளுக்கு எதிராக நான், எனது தந்தை உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்தோம். இந்நாட்டில் குற்றமிழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
சந்திரிக்கா ஆட்சியில் ராஜிதவுக்கு வழக்கு தொடுக்கப்பட்டது. அவர் குற்றமற்றவர் என்பது நிரூபனமானது. அது சோடிக்கப்பட்ட வழக்கு எனவும் கூறப்பட்டது. வெள்ளை வேன் வழக்கிலும் அவர் விடுதலையானார். எனவே, வரலாறு ராஜித சேனாரத்னவை நிச்சயம் விடுதலை செய்யும்.
இந்த அரசாங்கத்தை எப்படியும் கவிழ்ப்போம்.” – என்றார்.