” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டம்மூலம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் இருந்து வெளியில் வர முடியாது. பாதீட்டில் உள்ள யோசனைகள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பது பற்றி ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
பாதீட்டை தோற்கடிக்க வேண்டியது , எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பாகும். எனவே ,எதிர்க்கட்சி தலைவரின் நடவடிக்கை பற்றி கவனம் செலுத்திவருகின்றோம். அவர் தமது நிலைப்பாட்டை முதலில் அறிவிக்கப்பட்டும். அதன்பின்னர் எமது முடிவு அறிவிக்கப்படும் எனவும் நாமல் கூறினார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றிருந்த நாமல் ராஜபக்ச இது தொடர்பில் கூறியவை வருமாறு,
” கடந்த வருடம் முன்வைக்கப்பட்ட பாதீட்டில் இருந்த பல விடயங்கள் இம்முறை பாதீட்டிலும் உள்ளன. கடந்த வருடம் அவற்றை அமுல்படுத்தாமல் மீண்டும் இம்முறை முன்வைப்பது நியாயமா?
வரி விதிப்பு, கடன் மற்றும் அரச சொத்துகள் விற்பனை என்பனவே அரச வருமான மார்க்கங்களாக உள்ளன. நிலைமை இப்படி இருந்தால் கடன் சுமையில் இருந்து மீள முடியுமா?
உற்பத்தி பொருளாதாரம், ஏற்றுமதி, சுற்றுலாத்துறை மேம்பாடு, முதலீட்டு உள்ளீர்ப்பு, கிராமிய பொருளாதாரம் என்பவற்றின் ஊடாக அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிவகைகள் எவை என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
பாதீட்டில் உள்ள சில யோசனைகள் ஏப்ரல் மாதம்தான் அமுலாகும். ஆனால் ஜனவரியில் வரி அதிகரிக்கப்படும். அடுத்த வருடம் தேர்தல் வருடமாகும். எனவே, ஏபரல் மாதம் இலக்கு வைக்கப்பட்டது தேர்தலுக்காகவா? எனவே பாதீட்டு யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் ஜனாதிபதி எமக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
பாதீட்டில் உள்ள யோசனைகளை எடுத்துகொண்டால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையில் இருந்து வெளியில் வர முடியாது.
அரச ஊழியர்களுக்கு எவ்வாறு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் , கடன் வாங்கப்படுமா, பணம் அச்சிடப்படுமா இந்த விடயம் பற்றியும் தெளிவுபடுத்தல் அவசியம். பாதீட்டில் உள்ள மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம். ஏனையவற்றை மக்கள் நல திட்டங்களாக மாற்றுவதற்கு அழுத்தம் கொடுப்போம்.” – என்றார்.