இரண்டு கோடுகளால் மாறிபோன இலங்கையின் தலைவிதி!

” 69 இலட்சம் மக்கள் , இரண்டு கோடுகளை தவறாக பயன்படுத்தியதால் –  இலங்கையின் அனைத்து மக்களும் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கோடுகள் தானே என்று இனிமேலும் அலட்சியமாக செயற்படக் கூடாது. வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தை முறையாக பயன்படுத்த வேண்டும்.”

இவ்வாறு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமை தொடர்பில் இன்று (29) ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், மேலும் கூறியவை வருமாறு,

 ” எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு விடயத்தையும் அலட்சியமாக பார்க்கவோ செயற்படவோ கூடாது. அப்படி செயற்பட்டதால்தான் இன்றைய நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. வாக்களித்தவர்கள் மாத்திரம் அல்ல அனைவருமே இன்றைய நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இந்த அரசாங்கத்தின் எந்தவிதமான திட்டமிடலும் இல்லை.டீசல் பெற்றோல் மண்ணென்னை கடைசி கட்டத்தை அடையும் அதனை கொண்டு வருவதற்கு எந்தவிதமான திட்டத்தையும் முயற்சி செய்யாமல் இன்று கட்டாருக்கும் ரஸ்யாவுக்கும் ஒடிக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் இந்த நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது.தொடர்ந்தும் இந்த அரசாங்கம் வெளிநாடுகளில் கடன் பெறுவதை மாத்திரமே இலக்காக கொண்டு செயற்படுகின்றது.நாங்கள் நாட்டிற்குள் டொலரை கொண்டு வருவதற்கு எந்தவிதமான திட்டமும் இல்லை.

எவ்வளவு காலத்திற்கு கடன் வாங்கி நாட்டை கொண்டு செல்ல முடியும்.எனவே நாட்டிற்குள் எங்களுடைய வளங்களை பயன்படுத்தி டொலர் கொண்டு வருவதற்கான திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.அதனை விடுத்து தொடர்ந்தும் ஏனைய நாடுகளில் கையேந்திக்கொண்டு இந்த நாட்டை எவ்வளவு காலத்திற்கு முன் கொண்டு செல்ல முடியும்.?

இன்று ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ அமைச்சர்களாகவோ இருக்கின்ற எவருக்கும் எந்தவிதமான திட்டமிடலும் இல்லை.இவர்கள் காலை முதல் மாலை வரை எந்த நாட்டில் கடன் வாங்க முடியும் என்பதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எங்களுடைய நாட்டில் என்ன வளம் இல்லை.இயற்கை எளில் நாட்டை சூழவும் கடல் சிறப்பான மன்வளம் இப்படி அனைத்தையும் வைத்துக் கொண்டு ஏன் ஏனைய நாடுகளில் தொடர்ந்தும் நாம் கையேந்த வேண்டிய நிலை.இதனை மாற்றி அமைக்க வேண்டுமாக இருந்தால் இப்போதாவது அரசாங்கம் இதற்காக ஒரு குழுவை அமைத்து அதற்கான திட்டமிடலை செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் நாம் ஏனைய நாடுகளிடம் கையேந்துகின்ற நிலையை மாற்றி அமைக்க முடியாது.

அரசாங்கத்தின் நட்டமீட்டுகின்ற அனைத்து துறைகளையும் தனியாருக்கு வழங்கு வேண்டும்.இன்று அபிவிருத்தி அடைந்துள்ள அனைத்து நாடுகளிலும் இந்த நிலைமையே காணப்படுகின்றது.அனைத்தையும் அரசாங்கம் செய்ய முடியாது.நிர்வகிக்கவும் முடியாது.எனவே சரியான திட்டமிடலுடன் தனியாருக்கு வழங்கி நட்டமீட்டுகின்ற துறைகளை இலாபமீட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் நாம் என்றுமே அபிவிருத்தியை நோக்கி முன் செல்ல முடியாது.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles