இரத்தினபுரி வாழ் அனைத்து மதத்தவர்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு தான் முன்னின்று செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி நாற்சதுர சுவிசேஷ சபையின் போதகர் தேவ குமாரனை சந்தித்து ஆசிப் பெற்றுகொண்டதை அடுத்து, இந்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் இதுவரை பாதுகாக்கப்படாத நிலையில், அவர்களின் மத சுதந்திரத்திற்கும் தற்போது அச்சுறுத்தலான நிலைமைகள் காணப்படுவதாக தனக்கு அறிய கிடைத்ததாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தமிழ் மக்கள் பிரதிநிதியொருவர் இல்லாமையே சிறுபான்மை சமூகம் தமது உரிமைகளை விட்டுகொடுக்க காரணம் என கூறிய அவர், இனி இரத்தினபுரி வாழ் சிறுபான்மை சமூகத்தின் பாதுகாவளனாவும், அவர்களின் குரலாகவும் தான் முன்னிற்பதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன், இதுவரை சிறுபான்மையினரால் இழக்கப்பட்டு வந்த உரிமைகளை தான் இனி ஒருபோதும் அவர்கள் இழப்பதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதன் ஊடாக, சிறுபான்மை சமூகத்தின் மதத் தலங்களின் மேம்பாட்டை துரிதப்படுத்த நிதியுதவிகள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கும் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.










